Sunday, 11 January 2015

நான்: ஒரு அறிமுகம்

நான், இலங்கையின் மலைகள் சூழ்ந்த நகரமான கண்டியில் வசிக்கும் ஒரு மாணவன். அறிவியல், பொறியியலின் எல்லாப் பரப்புக்களிலும் ஆர்வம் கொண்டவன். குறிப்பாக இயற்பியல், பரிணாம உயிரியல், மனோதத்துவம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.

தமிழ் மற்றும் ஆங்கில நாவல்/ கட்டுரைகள் வாசித்தல், ஆங்கில / தமிழ் / ஹிந்தி திரைப்படங்கள் பார்த்தல் - அவற்றை ஆராய்தல், புகைப்படக்கலை, ப்ரோக்ராமிங், விவாதம் என நேரத்தை செலவிடுபவன். Atheism, Liberalism, Democracy போன்ற கொள்கைகளில் நம்பிக்கை உண்டு.

சில பொழுதுகளில் நான் எல்லாம் தெரிந்தவன்போல எழுதிக்கொண்டாலும், அது மிகவும் சிறுபிள்ளைத்தனமான கருத்து என்பதையும், எனது புரிதல்கள் முழுமையானவை அல்ல என்பதையும் அவை என்றுமே முழுமையடையப் போவதில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும், இங்கே எழுதப்போகும் எனது கருத்துக்கள் என் புரிதல்களையும் மொழியாற்றலையும் கூர்தீட்டுவதற்கான வழியாகவே எண்ணியிருக்கிறேன்.

இணையத்தில் என்னைப்பற்றி சிலருக்கு முன்னமே தெரிந்திருக்கலாம். 2008 ஆம் ஆண்டிலிருந்து, இணையத்தை, குறிப்பாக தமிழ் பதிவுலகத்தின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். அவ்வப்போது, சிலபல பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கள் இட்டு, ஒருசில விவாதங்களிலும் பங்கேற்றிருக்கிறேன். 

2008 - 2011 காலத்தில் தமிழ்ப் பதிவுலகத்தில் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது. பொழுதுபோக்கான மொக்கைப் பதிவுகளுக்கு பல நூற்றுக்கணக்கான கும்மிப் பின்னூட்டங்கள் குவிந்த அதேவேளை, தரமான பதிவுகளுக்கும் குறிப்பிட்டளவு (20,30) பதில்கள் சேர்ந்து கொண்டிருந்தன. இன்று, தமிழ்ப் பதிவுலகம் மரணப் படுக்கையில் கிடக்கிறது என்று சொல்லலாம். ஓரிருவரைத் தவிர பலர் எழுதும் பதிவுகளுக்கு வரவேற்பு இல்லை. எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் ஒரேயடியாக Facebook / Google+ பக்கம் இடம்பெயர்ந்துவிட்டார்கள். விளைவாக, அங்கே எழுதுபவர்கள் பதிவுகளையும் கருத்துக்களையும் நாலே வரிகளில் குறைப்பிரசவிக்க, அதைக்கூட சரியாக வாசிக்காமல் லைக் செய்துவிட்டு போகும் நிலையில் வாசகர்கள் இருக்கிறார்கள்.

இப்படியொரு நிலையில், Facebook ஐ விட்டு பதிவுலகத்துக்கு வந்திருக்கிறேன். நைந்துகிடக்கும் பதிவுலகத்தையும் வாசிப்பையும் தூக்கி நிறுத்தவெல்லாம் வரவில்லை (அதற்கு ஜெயமோகன், சாரு போல பலர் இருக்கிறார்கள்). பதிலாக, எனது எழுத்துக்களை பேஸ்புக்கின் இன் ஸ்டேட்டஸ் வெள்ளத்தில் அடிபட்டு மூழ்கிவிடாமல் காப்பாற்றி, சேமித்து வைக்கும் சுயநல நோக்கத்திற்காகவே இங்கே வந்திருக்கிறேன். பார்க்கலாம்....

No comments:

Post a Comment

DISCLAIMER

மேலே சொன்னதுல உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா அவசரப்பட்டு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவிடவேண்டாம். பின்னூட்டப்பெட்டிக்கு வாங்க, பேசலாம். எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.