Sunday, 18 January 2015

பாவ புண்ணியங்கள்: என் பார்வையில் - 2

(முந்தைய பகுதி இங்கே)

கர்மா எனும் எண்ணக்கரு தேவையற்றதா?

கர்மா (அல்லது பாவ புண்ணியங்கள்) எனும் கொள்கையானது உலகின் நடப்புக்களை இவ்வாறு விளக்குகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் காரியங்களுக்கு என்றாவது ஒருநாள் பதில் கூற வேண்டும். ஒருவன் செய்த பாவங்களுக்கு தண்டனைகளையும் புண்ணியங்களுக்கு வெகுமதிகளையும் அவன் இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ (இந்திய மதங்களின்படி) அல்லது சொர்க்க-நரகத்திலோ (ஆபிரகாமிய மதங்களின்படி) கட்டாயம் பெற்றுக்கொள்வான்.


இதில், "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பது இதே பிறவியில் நடப்பதில்லை என்பது கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது. உலகமெங்கும் வறுமையால் அடிபட்டு, மானத்தை இழந்து தற்கொலை செய்பவர்களும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் அப்பாவிகளும் ஒன்றுமறியாக் குழந்தைகளும் செய்த வினைகளுக்கான பயனைத்தான் அனுபவிக்கின்றன என மனிதத்தன்மை எஞ்சியிருக்கும் எவராலும் சொல்ல முடியாது. 

அதேபோல, கொடுமைகள் செய்த அனைவரும் தண்டிக்கப்படுவதில்லை என்பதும் கண்கூடாகத் தெரியும் ஒன்றுதான். நம் ஹிட்லர் கூட வலியில்லாமல், தன்மானத்துடன் தற்கொலை செய்துகொண்ட அதேவேளை, எந்தத் தவறும் செய்யாத Alan Turing (கணினியியலின் தந்தை), சமூகத்தின் கொடுமைகள் தாங்க முடியாமல், தற்கொலை செய்துகொண்டார். பலகோடி பேரை கொலைசெய்த ஜோசப் ஸ்டாலின் ராஜா மாதிரி வாழ்ந்து, மூளையில் நரம்பு வெடித்து தூக்கத்தில் வலியற்று இறந்தார். யாரையும் கொல்லாத எனது சொந்தக்காரர் ஒருவரும் அதே மாதிரித்தான் இறந்தார். அறிவியல் உண்மைகளைக் கூறிய பலரும் சித்திரவதைப்படுத்தப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டதும், மதம் மாற மறுத்த பல அப்பாவிகள் கொடுமையாக சித்திரவதைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதும் வரலாறு.

தன செயல்களின் பயன்களை ஒருவன் இறப்பின் பின்னர் (சொர்க்க-நரகத்தில் அல்லது மறுபிறவியில்) அனுபவிக்கிறான் என்பதை நம்புவதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. அறிவியலின் பார்வையில் இறப்பு ஒரு முற்றுப்புள்ளி மட்டுமே. 'இறப்பின் பின்னர் இருப்பது என்ன?' என்பது யாருக்கும் தெரியாததால் (அறிவியலின் பார்வையில் அந்தக் கேள்விக்கே அர்த்தம் இல்லாததால்), கர்மாவை நம்புபவர்கள் செயல்களுக்கான தண்டனைகளும் வெகுமதிகளும் இறப்பிற்கு பின்னர் இருப்பதாக சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். மரணத்தைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாக பேசலாம்.

சரி, அப்படியே கர்மா முற்றுமுழுதாக நம்பத்தகுந்தது என்றால், இத்தனை மெனக்கட்டு, செலவுசெய்து ஒரு நீதித்துறையையும் காவல் துறையையும் நடத்தத் தேவையில்லையே? யார் செய்யும் தவறையும் துப்புத்துலக்கவோ, தண்டனை வழங்கவோ அவசியமில்லையே? கர்மாவே அவர்களை பார்த்துக்கொள்ளும் என விட்டுவிடலாமே? உலகிலுள்ள எல்லா நடைமுறை அமைப்புக்களும் கர்மாவை கண்டுகொள்ளாமல் செயற்படுவது ஏன்?

எனவே, மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து, கர்மா, மற்றும் பாவ புண்ணிய கோட்பாடுகள் யதார்த்த உலகத்தில் வேலை செய்வதில்லை என்பதும், அவை ஒருவித மாயை மட்டுமே எனவும் கொள்ள முடியும்.

கர்மாவுக்கு மாற்றாக இருக்கும் கொள்கை எது?


The World is Random என்பதுதான் மாபெரும் உண்மை. அறிவியலுடன் ஒத்துப்போகும் 'உலகம் ஒழுங்கற்றது' எனும் கருத்தை, கர்மாவுக்கு மாற்றாக கருதலாம். நல்லவன் கெட்டவன் என பாகுபாடு பாராமல், எல்லாருக்கும் நல்லதும் கெட்டதும் நடக்கிறது எல்லாம் கண்டபடி நடக்கிறது. இதற்குள் வலிந்து ஓர் அர்த்தத்தை தேடுவதும், கர்மாவை முயன்று இதற்குள் நுழைப்பதும் அர்த்தமற்றது என்பதே என்னுடைய கருத்து. The World is Unfair என்பதும் ஒருவகையில் உண்மைதான். இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் நல்லவர்கள், குறிப்பாக அப்பாவிகள் முன்னேற முடிவதில்லை.. நசுக்கப்படுபவர்களுக்கு சொர்க்கமும், நசுக்குபவர்களுக்கு நரகமும் கிடைக்கும் என்பது வெறும் ஆறுதல் வார்த்தைகள் மட்டும்தான். நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ்வதே உலகத்திடமிருந்து நாம் தப்பக்கூடிய வழி என்பதை உணர்தல், கர்மாவில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பதை விட யதார்த்தத்துக்கு நெருக்கமானது. 


No comments:

Post a Comment

DISCLAIMER

மேலே சொன்னதுல உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா அவசரப்பட்டு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவிடவேண்டாம். பின்னூட்டப்பெட்டிக்கு வாங்க, பேசலாம். எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.