(முந்தைய பகுதி இங்கே)
மக்கள் ஏன் பாவ புண்ணியங்களை நம்புகிறார்கள்?
ஆரம்பத்தில் சொன்னதுபோல
உலகில் உள்ள எல்லா மதங்களும் பாவம்-புண்ணியம் எண்ணக்கருவை ஏதோவொருவகையில்
கொண்டிருகின்றன. மக்களும் கேள்வி கேட்காமல் கர்மாவை நம்பத் தயாராக இருக்கிறார்கள்.
உலக நடப்புக்களை கர்மா இல்லாமலே விளக்க முடியுமென்றால், மக்களும் மதங்களும் ஏன்
இவ்வளவு சிக்கலான கர்மாவை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்?
என் கருத்துப்படி, இதற்கு இரண்டு காரணங்கள்
இருக்கலாம். ஒன்று, மேலே குறிப்பிட்ட "நான் ஏன் நல்லவனாக வாழவேண்டும்?" எனும் கேள்விக்கு ஒரு
எளிமையான பதிலை கர்மா மற்றும் சொர்க்க-நரக எண்ணக்கருக்கள் அளிக்கிறன. இன்னொன்று, இந்த ஒழுங்கற்ற உலகில் ஒரு மறைமுக ஒழுங்கு இருப்பதாக மக்களை அவை நம்பவைக்கின்றன. இங்கே காணக்கூடிய
அநீதிக்களை அவை நியாயப்படுத்துகின்றன. அதாவது,
அநீதிக்களுக்கு தண்டனையும் புண்ணியங்களுக்கு
வெகுமதியும் பலருடைய வாழ்க்கையில் கிடைப்பதில்லை. "ஏன் இப்படி?" என குமுறும் உள்ளங்களுக்கு, "இதற்கெல்லாம் பலன்கள்
அவர்கள் இறந்த பிறகு கிடைக்கும்" என ஆறுதல் கூறுகின்றன.
உதாரணமாக, ஒரு நல்லவன் நன்றாக
வாழும்போது "அவனுடைய புண்ணியங்கள் அவனை வாழவைக்கிறன" என்கிறார்கள். அதே
நல்லவன் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தால் "உன் புண்ணியங்களுக்கு அடுத்த
பிறவியில் / சொர்க்கத்தில் வெகுமதி கிடைக்கும்" என்றோ, அல்லது "உன் கர்மா, உன் பிள்ளைகளை நன்றாக
வாழவைக்கும்" என்றோ சப்பைக்கட்டாக ஆறுதல் கூறுகிறார்கள். அதேசமயம், ஒரு கெட்டவன், தற்செயலாக தோல்விகளை
சந்திக்கும்போது, "அவன் அப்போ செஞ்சதுக்கு இப்போ பலன் கிடைக்குது பாரு" என
குதூகலிக்கிறார்கள். அதே கெட்டவன் சுகபோகமாக வாழும்போது "இவனுக்கெல்லாம்
நரகத்துல இருக்குது பார்", "இவனோட பிள்ளைங்க நாசமா போவாங்க" என்றெல்லாம் சப்பைக்கட்டாக
சபிக்கிறார்கள்.
இதை வைத்துப் பார்த்தால், கர்மா அல்லது சொர்க்க-நரக
நம்பிக்கைகள், பொதுமக்களுக்கு ஒரு அற்பமான மனத்திருப்தியை மட்டுமே வழங்குவதைக்
காணலாம். மேலே குறிப்பிட்டவற்றில் எந்தவொரு லாஜிக்கும் இல்லை என்பது உங்களுக்கு
எளிதாகப் புரியும். ஆனால், சாதாரண மக்களுக்கு லாஜிக் தேவையில்லை,
வெறும் அற்ப மனதிருப்தியையே அவர்கள்
விரும்புகிறார்கள். அதாவது, இந்த நம்பிக்கைகள் ஒரு போதைப்பொருள் மாதிரி. சாக்கடையின் நாற்றம்
எனும் உண்மையை தாங்கிக்கொள்வதற்காக ஒரு சாக்கடைத் தொழிலாளி மது அருந்துவதைப் போல, the world is unfair அல்லது
உலகம் ஒழுங்கற்றது எனும் உண்மையை மறைக்க, தாங்கிக்கொள்ள, மக்கள் கர்மா எனும் மாயையை லாஜிக் பார்க்காமல் நம்புகிறார்கள்.
"Religion is the Opium for people" (மதம் மனிதனுக்கு ஒரு போதைப்பொருள்) எனும் கருத்துக்கமைய, பல மதங்களும், மக்களின் திருப்திக்காக, இவ்வகையான கேள்விகளுக்கு
திருப்தியான பதிலை தருவதற்காக, பாவ-புண்ணிய எண்ணக்கருவை ஏதோ ஒருவகையில் உள்ளடக்கியிருக்கின்றன.
ஏன் கர்மா எனும் எண்ணக்கரு நிராகரிக்கப்படவேண்டும்?
இவற்றைப் பார்த்தால், சிக்கலான ஆன்மா & கர்மா எண்ணக்கருக்களின்
தேவை இல்லாமல் உலகின் நிகழ்வுகளை விளக்க முடிகிறது. ஆனால், கர்மா கிடையவே கிடையாது
என்று அடித்துச் சொல்ல முடியாது. ஒரு கொள்கை தேவையில்லை என்பதும், அந்தக் கொள்கையே தவறு
என்பதும் ஒன்றல்லவே? எனவே, இந்த இடத்தில், அறிவியலின் அடிப்படை விதியான Occam's Razor ஐ பயன்படுத்தலாம். ஒரு செயற்பாட்டை விளக்கக்கூடிய இரண்டு சாத்தியமான கோட்பாடுகளில், இரண்டு பக்கங்களுக்கும்
ஆதாரங்கள் இல்லாவிட்டால், அவை இரண்டிலும் மிக எளிய,
குறைந்த அனுமானங்களை எடுக்கும் கோட்பாட்டையே
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அறிவியலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் Occam's Razor விதியாகும். (மேலும் விபரங்கள் இங்கே) இதன்படி, சிக்கலான, அதிக அனுமானங்களுடன்கூடிய
கர்மா எனும் எண்ணக்கருவை விட்டு, உலகம் ஒழுங்கற்றது எனும் கொள்கையையே ஏற்றுக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment