(முந்தைய பகுதி இங்கே)
நான் ஏன் நல்லவனாக வாழவேண்டும்?
இப்படி ஒழுங்கற்ற உலகத்தில், நம் பாவங்களுக்கு
தண்டனைகளும் புண்ணியங்களுக்கு வெகுமதிகளும் கிடைக்காது. அவற்றை எதிர்பார்க்கவும்
முடியாது. "அப்படியானால், நான் ஏன் நல்லவனாக இருக்கவேண்டும்?
ஏன் கெட்டவனாக வாழக்கூடாது?" எனும் கேள்வி இப்போது
எழலாம். இந்தக் கேள்வியை, தண்டனை, வெகுமதி எனும் சிறுபிள்ளைத்தனமான பார்வையில் அணுகாமல், கொஞ்சம் பக்குவப்பட்ட
மனநிலையில் அணுகலாம்.
கொஞ்சம் யோசித்தால், தண்டனைக்குப் பயந்தும், வெகுமதிகளை எதிர்பார்த்தும்
நல்லவர்களாக வாழ்பவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது புரியும். செய்யும்
தவறுகளுக்கு தண்டனை தரமாட்டார்கள் என்று தெரிந்ததும் உடனே தேடித்தேடி தவறு
செய்யக்கூடியவன் ஒரு மனிதனா? நீங்கள் கர்மாவுக்கும், அது தரும் தண்டனைகளுக்கும் பயந்து மட்டும்தான் நல்லவர்களாக
இருக்கிறீர்களா? இல்லைதானே?
இந்த உலகத்தில் எல்லாரும்
சமம், எல்லாரும் எனக்குச் சமம் எனும்
கருத்தை மனசாட்சிக்குள் வைத்துக்கொண்டு சிந்தித்தால், குற்றவுணர்ச்சி, சுய ஒழுக்கம் போன்ற
உணர்வுகளே தன்னிச்சையாக நம்மை நல்லவனாக வைத்துக்கொள்ளும். அடுத்தவனை துன்புறுத்தி
அடையும் குறுங்கால இன்பத்தைவிட, நம்மால் அடுத்தவன் அடையும் இன்பத்தை பார்க்கும் சந்தோஷம் பெரிய போதை
என்பதை உணர்ந்தவர்களுக்கு கர்மா, சொர்க்க-நரக பூச்சாண்டிகள் தேவையில்லை. பக்குவப்பட்ட மனச்சாட்சிக்கு
மட்டுமே கட்டுபட்டு வாழ்பவனை ஒருவகையில் நல்ல மனிதன் என்று சொல்லிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment