குறிப்பு: கர்மா எனும் வார்த்தை பொதுவாக இந்திய மதங்களில் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா மதங்களிலும் இதற்கு இணையான ஒரு எண்ணக்கரு (concept) காணப்படுகிறது. பின்வரும் கட்டுரையில் "தனது பாவ புண்ணியங்களுக்கான விளைவுகளை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் (இப்பிறவியிலோ, மறுபிறவியிலோ, சொர்க்க நரகத்திலோ) அனுபவிக்க வேண்டும்" எனும் எண்ணக்கருவையே கர்மா என பொதுவாக விளித்துள்ளேன். எனவே, இக்கட்டுரை எல்லா மதங்களுக்கும் பொதுவானது.
மதங்களின் பார்வையில் புண்ணிய பாவங்கள்
ஆபிரகாமிய மதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களில்
இறந்தவர்கள் 'தீர்ப்பு நாள'ன்று (Judgement day) உயிர்ப்பிக்கப்பட்டு அவரவர் பாவ,
புண்ணியங்களுக்கேற்ப சொர்க்க நரகத்துக்கு
அனுப்பிவைக்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை காணப்படுகின்றது. இந்து மதத்தின்
பல்வேறு கொள்கைகளுள், சொர்க்க நரகம் பற்றிய கருத்துக்களுடன்,
இறப்பவர்கள் அவர்களது பாவ புண்ணியங்களுக்கு
(கர்மா) ஏற்றபடியான விளைவுகளை இப்பிறவியிலோ அல்லது மறுபிறவியிலோ அனுபவிப்பார்கள்
என நம்பப்படுகின்றது. பௌத்த மதமும், கர்மாவுக்கேற்பவே மறுபிறவிகள் நிச்சயிக்கப்படுகின்றன எனவும்
மறுபிறவிச் சுழலை விட்டு வெளிவருவதே வாழ்வின் நோக்கம் எனக் கூறுகிறது.
அதாவது, பொதுவாக எல்லா மதங்களுமே
மனிதன் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு தண்டனைகளும் வெகுமதிகளும் இந்தப் பிறவியில்
கிடைக்காவிட்டாலும் மரணத்துக்குப் பின்னர் கண்டிப்பாக கிடைக்கும் என உறுதி
கூறுகின்றன. மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகவும்,
'உலகில் சந்தோஷங்களும் துன்பங்களும் ஏன்
ஏற்படுகின்றன?' எனும் கேள்விக்கு விடையளிக்கவுமே மதங்கள் இவ்வழியைக் கையாளுவதாக
சொல்லப்படுகிறது.
கர்மாவைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது?
உண்மையைச் சொன்னால், கர்மாவை அறிவியல் ரீதியாக
அணுக முடியாது. அறிவியலின் கோட்பாடுகளைப்போல்,
கர்மா எனும் கோட்பாடு அளவிடக்கூடிய எந்த
விளைவுகளையும் தீர்மானமாக கணித்துச் சொல்வதில்லை. (The
theory of Karma doesn't produce any measurable and falsifiable predictions) அத்துடன், அறிவியல் அனைவருக்கும் பொதுவான விதிகளைப்பற்றித்தான் ஆராய்கிறது.
பாவம், புண்ணியம் என்பதும் தர்ம
நியாயங்களும் ஆளுக்கு ஆள், சமூகத்துக்குச் சமூகம், காலத்துக்குக் காலம் மாறுபடும். மாற்று மதத்தினர்மீது போர்தொடுத்து
அல்லது கழுவிலேற்றி சித்திரவதைப்படுத்திக் கொல்வது ஒருகாலத்தில் புண்ணியமாக
கருதப்பட்டது. இன்று அது பாவமாகக் கருதப்படுகிறது. இப்படி நிலையற்ற விஷயங்கள்
பற்றி அறிவியல் ஆராய்வதில்லை என்பதால், கர்மாவை ஆராயும்படி அறிவியலை வற்புறுத்த முடியாது.
No comments:
Post a Comment