“எல்லா மனிதர்களுக்கும் இருண்ட பகுதிகள் உண்டு. அதற்குள்ளே புகுந்து பார்ப்பதை நாம் தவிர்த்தால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று அர்த்தம்” - மதன்
பதைபதைக்கவைக்கும் மனித வன்முறையின் உச்சங்களை, அறிவியல்ரீதியான கண்ணோட்டத்தில், துப்பறியும் நாவலைப்போன்ற சுவாரஸ்யமான எழுத்தில், மனோதத்துவவியல், சமூகவியல் பார்வைகளில் வெறும் 63 பக்கங்களில் மதன் அலசியிருக்கிறார். மதனைப் பற்றி தனியாக கூற வேண்டியதில்லை. புகழ்பெற்ற கார்டூனிஸ்ட், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்ட கலைஞர். சுவாரஸ்யம் மட்டும் இல்லாமல், இப்படியான விடயங்களில் சமூகத்தின் பார்வைகளை மாற்றக்கூடிய ஒரு நூலாகவும், படிப்பவர்களுக்கு சில முக்கிய கருத்துக்களைக் கூறும் நூலாகவும் இது வெளிவந்திருக்கிறது. மனோதத்துவம், அறிவியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமில்லாமல், அனைவருமே கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது எனக் கூறலாம்.
American Psycho (ஒரு சீரியல் கில்லரைப் பற்றிய படம்) |
இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இதை வாசிப்பதற்கு, மனித வன்முறையின் எல்லைகளைத் தரிசிப்பதற்கு மிகவும் தயங்குவார்கள். படிப்பதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்க, இந்த மனிதத்தோல் போர்த்திய மிருகங்களைப்பற்றி ஏன் மெனக்கட்டு படிக்கவேண்டும் என்று கேட்பார்கள். உண்மையில், இந்தத் தொடர் மனநோயாளிகளைப் பற்றியதல்ல. சராசரி மனிதர்கள் எந்தளவுக்கு கொடூரமான வன்முறையாளர்களாக ஆக முடியும் என விளக்கும் தொடர் இது. இந்தப் புத்தகம் கூறும் செய்தி என்னவென்றால், இப்படிப்பட்ட குரூரமானவர்களுக்கும், நம்மைப் போன்ற பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி ஒரு நூலளவு மட்டும்தான். நம்மில் பலரும் கோபத்தின் உச்சியில், ஒருவித உந்துதலில் “இவனை கழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன?” என்று ஒருகணம் யோசித்திருப்போம், ஆனால், சமூக மற்றும் தனிமனித கட்டுப்பாடுகள் காரணமாக யோசிப்பதோடு மட்டுமே நின்றுவிடுகிறோம். இவர்கள், இன்னும் ஒருபடி மேலே போய், அதைச் செயற்படுத்துவதோடு, அதில் இன்பத்தை கண்டு, தொடர்ச்சியாக அவ்வாறு செய்கிறார்கள். ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.
சிக்காடிலோ என்பவர் சமூகத்தில் மிகவும் மதிக்கப்பட்ட ரஷ்ய ஆசிரியர். கண்ணியமான உடை, சுமுகமாகப் பழகும் விதம், ரஷ்ய இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு என ஒரு அருமையான மனிதனாக அறியப்பட்டவர். இவர் பன்னிரண்டு வருஷங்களில் ஒன்றல்ல, இரண்டல்ல, ஐம்பத்து மூன்று பேரை கொலைசெய்தார் (அதுவும் எப்படி? உடலெங்கும் கத்தியால் குத்தி, கண்களைப் பிடுங்கியெடுத்து, பீறிடும் இரத்தத்தை குடித்து, இறந்தவரை கடித்துக் குதறி, அப்புறம் இன்னொன்றும் செய்தார்) என்பதை நம்ப முடியுமா? இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல. ஒரு அருமையான மனிதராக சமூகத்தில் வாழ்ந்தபடியே திட்டம்போட்டு குரூரமாக கொலைகள் செய்தார். இவரைப் போன்ற சீரியல் கொலைகாரர்களையும், சாதாரண மனிதர்களையும் கலந்து உட்கார வைத்துவிட்டு பேச்சுக்கொடுத்தால், மனோதத்துவ மாணவர்களாலேயே இரண்டு தரப்புக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!! அந்தளவுக்கு, நமக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.
அத்துடன், அதே சிக்காடிலோவின் சிறுவயது அனுபவங்களைப் பார்த்தால், அவர்மீது அனுதாபமே மிஞ்சும். அவருடைய சிறுவயதில், உக்ரேனில் கடும் பஞ்சம் நிலவிய நேரம். காட்டுப்பகுதியில் நடந்துவந்த அவனையும் அவன் அண்ணனையும் இடைமறித்த, பஞ்சத்தால் அடிபட்ட ஒரு கூட்டம், அவனது அண்ணனை கொன்று, உடலைத் துண்டாக்கி, தீயில் வறுத்தெடுத்து உண்டதை சிறுவனான சிக்காடிலோ முழுதும் பார்க்க நேர்ந்தது. தந்தை போர்க்கைதியானார். தாயின் அன்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. மனைவியும் அவனை மதிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய ஆண்மையும் பறிபோய்விட்டது. இதிலிருந்தெல்லாம் தப்பிக்க, ஒரு மாய உலகத்தை தனக்குள்ளேயே சிருஷ்டித்தான். மிகக் குரூரமான பாலியல் கற்பனைகளை வளர்த்துக்கொண்டான். பிறகு நடந்ததுதான் மேலே சொன்னது.
இப்படிப்பட்ட கொலைகாரர்கள் எல்லாருமே காட்டுமிராண்டிக் கலாச்சாரம் கொண்ட மேலைத்தேய நாடுகளில் மட்டும்தான் இருக்கிறார்கள். தொன்மையான கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் எங்களிடம் இந்தப் பிரச்சனை எல்லாம் கிடையாது என்று மார்தட்டத் தேவையில்லை. சீரியல் கொலைகாரர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நம் நாடுகளிலும் இவர்கள் இருந்திருப்பார்கள். என்ன, நம் போலீஸுக்கு இவர்களைக் கண்டறிய திராணி இல்லை. அவ்வளவுதான். இதை மதனே புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment