The Dahmer |
புத்தகம் முதலில் புகழ்பெற்ற(?!) சீரியல் கொலைகாரர்களைப்பற்றி பேசுகிறது. அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் வாழ்ந்து, பலரைக் கொடூரமாக சித்திரவதைப்படுத்தி கொலைசெய்து, அவர்களின் உடல் உறுப்புக்களை நினைவுச்சின்னங்களாக வைத்திருந்த, கொலையுண்டவர்களின் உடற் பாகங்களை உண்டு ருசித்த கொலைகாரர்களான தி டாமர், ஆண்ட்ரே சிக்காடிலோ, டேவிட் பெர்கொவிஸ் போன்றவர்களைப் பற்றி, அவர்களின் கொலை செய்யும் முறைகள், போலிஸ் அவர்களை கண்டுபிடித்த கதை, அவர்களின் குழந்தைப் பருவ பாதிப்புக்கள் என விரிவாக அலசப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சீரியல் கொலைகாரன் எப்படி உருவாகிறான் என்பதையும் அலசியிருக்கிறது. நம் குழந்தைகளை எப்படி நடத்தக்கூடாது என்பதை விரிவாகச் சொல்கிறது.
அத்துடன், வீட்டுக்கு வீடு காணப்படும், பொதுவாக நம்நாட்டில் அதிகம் காணப்படும் “குரூரமான கணவர்களை”ப் பற்றியும் இப்புத்தகம் பேசுகிறது. நம்நாட்டில், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என இருந்துவிடுவதால், இவ்விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. நம் கலாச்சாரத்தின் உளுத்துப் போன, ஆயிரம் காலத்து திருமண முறையும் இதற்கு பெரிதும் உதவுகிறது. மேலைநாட்டில், இப்படியான ஒரு மிருகத்துக்கு வாழ்க்கைப் பட்ட பெண்ணொருத்தி, கொடுமை தாங்க முடியாமல், வெளிவந்து கோர்ட்டில் சொன்ன விஷயங்களை என்னால் எழுத முடியவில்லை. புத்தகத்தில் வாசித்தால், “எப்படியாச்சும் என் பொண்ணை ஒரு இடத்துல கட்டிக் கொடுத்துட்டேன்னா, என் கடமை முடிஞ்சிடும்” என, வரதட்சிணையும் கொடுத்து, பெண்ணை ஒரு மிருகத்துக்கு கட்டிக்கொடுத்து சந்தோஷப்படும் நம்நாட்டுப் பெற்றோருக்கு கொஞ்சம் புத்தியில் உறைக்கலாம்.
புத்தகத்தின் அடுத்த பகுதி, கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகள் மற்றும் அவர்களது அடியாட்களின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறது. நம்மைப்போல நல்ல மனிதர்களாக, குடும்பத்தவர்களை அரவணைத்து வாழ்ந்த சில இந்துக்கள், கூட்டமாகக் கூடி பம்பாய்க் கலவரத்தில் கர்ப்பவதியான ஒரு முஸ்லிம் பெண்ணின் பிறப்புறுப்பில் கைவிட்டு, கருவை பிய்த்தெடுத்து தீவைத்து கொளுத்த எப்படி மனது வந்தது? நாஜிக்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகம் போவதுபோல புறப்பட்டுச் சென்று, நூற்றுக்கணக்கான யூதர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக் கொன்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து, மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இசை நிகழ்ச்சிகளுக்குப் போனது எப்படி? இதற்குக் காரணம் நாம்-அவர்கள் எனும் சமூகப் பாகுபாடுதான் என விரிவாக விளக்குகிறது.
இத்துடன், மக்களை ஏமாற்றும் பக்தி இயக்கங்கள் பற்றியும், அதன் சைக்காலஜியைப் பற்றியும் புத்தகம் விளக்குகிறது. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ எனும் மனநிலையில் மக்கள் சேரும் இவ்வித இயக்கங்களையும், அதில் சில இயக்கங்களில் நடந்த குரூரங்களையும் மதன் விபரிக்கிறார்.
அடுத்ததாக, பரிணாம மனோதத்துவவியலின் (evolutionary psychology) பார்வையில் மனிதனின் கொலை, திட்டமிட்ட கொலை, கற்பழிப்பு போன்றவற்றை ஒத்த நடத்தைகள் நம் உறவினரான சிம்பன்ஸிகளிடம் காணப்படுவதை விளக்குகிறது. கொலை ஏன் தடை செய்யப்பட்டது? திருமணம் ஏன் எல்லாச் சமூகங்களிலும் காணப்படுகிறது? என பல கேள்விகளுக்கு அறிவியல்ரீதியான பதில்கள் இங்கே கிடைக்கின்றன.
ஒரு விதத்தில் மிகச் சுயநலமான, மிக கில்லாடித்தனமான கண்டுபிடிப்பு – திருமணம்! சற்று யோசித்துப் பாருங்கள். உங்களோடு வாழ்ந்து, குழந்தைகள் பெற்றுத் தரக்கூடிய ஒரு பெண்ணை தனியாக விட்டு நீங்கள் நகர்ந்தாலே, நூற்றுக்கணக்கான ஆண்கள் அவளை தூக்கிச்செல்வதற்காக காத்திருகிறார்கள் என்றால் எப்படி இருக்கும்? அவர்களில் பலசாலியான ஒருவன் உங்களை அடித்துத்தள்ளிவிட்டு அவளை அபகரித்துக்கொண்டு போய்விடுவான் என்றால் அந்தப் பெண்ணைவிட்டு நீங்கள் அகல முடியுமா? மற்ற வேலைகள் எதையும் கவனிக்க முடியுமா?
அதாவது, இந்த முக்கியமான பிரச்னைக்கு தீர்வாக: “உன் பெண்ணை நான் தூக்க மாட்டேன். என் பெண்ணை நீ தூக்க கூடாது” என மனிதன் சமூகத்துடன் போட்டுக்கொண்ட ஒரு பரஸ்பர ஒப்பந்தம் (பார்க்க: Social Contract) தான் ஆயிரம் காலத்துப் பயிரான திருமணம் என்கிறார் மதன்.
கடைசியாக, ஜனநாயக முறையில் அதிபராக தெரிவுசெய்யப்பட்ட ஹிட்லரும், ஸ்டாலினும் எப்படி குரூரமான சர்வாதிகளாக மாறினார்கள் என்பதை, சமூகவியல், மனோதத்துவியல் காரணங்களைக் காட்டி, அவர்களது சிறுவயது அனுபவங்களையும் கூறி மதன் விளக்குகிறார். இன்று நாம் தெரிவுசெய்யும் எந்த ஒரு அரசியல்வாதியும், சரியான சட்டரீதியான கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் குரூரமானவராக ஆகலாம் என்பதை புத்தகம் விளக்குகிறது.
இப்படியாக, மனிதகுலத்தின் வன்முறை வரலாற்றின் ஒரு தெளிவான குறுக்குவெட்டுத் தோற்றமொன்றையும், மனிதனின் பரிணாம மனோதத்துவ வரலாற்றையும் சுவாரஸ்யமாக, 63 பக்கங்களுள் மதன் தந்திருக்கிறார். நான் படித்த மிகச் சிறந்த புத்தகங்களுக்குள் இதுவும் ஒன்று எனக் கூறலாம்.
புத்தகம் PDF வடிவிலும் கிடைக்கிறது. லிங்க் இங்கே:
No comments:
Post a Comment