Sunday, 18 January 2015

பாவ புண்ணியங்கள்: என் பார்வையில் - 5

(முந்தைய பகுதி இங்கே)

ஏன் மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க வேண்டும்?

முன்னமே குறிப்பிட்டதுபோல கர்மா எனும் எண்ணக்கரு மக்களுக்கு ஒருவிதமான மன திருப்தியை வழங்குவதை மறுக்க முடியாது. சரி, அப்படியான ஒரு திருப்தியை, நம்பிக்கை(hope)ஐ வழங்கும் கருத்துக்களை, (அவை தவறானவையாகவே இருந்தாலும்) ஏன் மெனக்கட்டு சிதைக்க வேண்டும்? சாக்கடைத் தொழிலாளியின் மது பாட்டிலை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு அவனை ஏன் நாறும் சாக்கடையில் குரூரமாகத் தள்ளிவிடவேண்டும்? என சிலர் கேட்கலாம். 

 

என்னுடைய கருத்தில், சாக்கடை நாற்றமடிக்கிறது எனும் உண்மையும், மது ஒரு தற்காலிக, உடலை உருக்கும் ஒரு தீர்வுதான் என்பதும் அந்தத் தொழிலாளிக்கு கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். வேறு வழியில்லாமல், அவன் அதற்குள் இறங்கும்போது அவன் மது அருந்துவதை நாம் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், சாக்கடையைப் பற்றி எதுவுமே தெரியாதவனை, அது மிகவும் சுத்தமானது என நம்பவைத்து, நன்றாக குடிக்கவைத்து சாக்கடையுள் தள்ளிவிடுவது மிக மிக குரூரமான செயல். ஆயிரக்கணக்கான யூதர்களை சுத்தமாக குளிக்க வார்க்கிறோம் என நம்பவைத்து விஷவாயு அறைக்குள் அனுப்பிய ஹிட்லரின் செயலுக்கு இது சமமானது. குழந்தைகளுக்கு கர்மா மற்றும் சொர்க்க-நரகங்களைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்போது, நாமும் இந்தக் குரூரத்தைத்தான் செய்கிறோம்.

கண்ணா, இது எப்டி இருக்கு??
அதாவது, எனது கருத்துப்படி, பொய்களின் துணை இல்லாமலே உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலைதான் மிகவும் சிறந்தது. ஆனால், அது எல்லாருக்கும் கைவராது. அதனால், அப்படிச் செய்ய முடியாதவர்கள், மெய்மையின் (reality) கொடுமையை மறக்க ஒரு மாயையை உருவாக்கி அதை நம்புவதில் தவறில்லை. ஆனால், அந்த மாயையே காலப்போக்கில் நம் உலகமாகிவிடக்கூடாது. (The Matrix படத்தில் இந்தக் கருத்தை மிகவும் கற்பனைத்திறனுடன் சொல்லியிருப்பார்கள்) பொய்யை தற்காலிகமாக நம்பும்போது, அடிமனதில் 'எது உண்மை' எனும் பிரக்ஞை தொடர்ந்து இருந்துகொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால், தவறான நம்பிக்கைகள் ஒரு புற்றுநோய் போல எமது தெளிவான, லாஜிக்கல் சிந்தனைகளை (logical thinking) முடமாக்கி நம்மை மனரீதியாக குருடர்களாக்கிவிடும் அபாயம் இருக்கிறது.

முடிவுரை

life is random but it's all good cuz so am i tee shirts by randomocity
எனவே, சுருக்கமாகச் சொன்னால், கர்மா அல்லது சொர்க்க நரகங்களின் இருப்புக்கு எவ்வித அறிவியல்ரீதியான, தர்க்கரீதியான அல்லது நடைமுறை யதார்த்தரீதியான  ஆதாரங்களும் கிடையாது. முழுமையான நல்லவனாக வாழ்வதற்கும் கர்மா மீதான நம்பிக்கை தேவையில்லை. மாறாக, 'உலகம் ஒழுங்கற்றது' எனும் எண்ணக்கரு உலக நடப்புக்களை இன்னும் எளிதாக, குறைந்த அனுமானங்களுடன், அறிவியலுக்கும் யதார்த்தத்திற்கும் அருகாமையில் நின்று விளக்குகிறது. இருந்தும், இந்தத் தத்துவங்களை ஆழமாக ஆராய விரும்பாத பொதுமக்கள் ஒருவித மன திருப்திக்காக கர்மாவை நம்பவே விரும்புகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால், அப்படி ஒரு தற்காலிக மனத்திருப்தியை அடைந்து மகிழும்போது 'உலகம் ஒழுங்கற்றது' என்பதையும், கர்மா என்பது ஒரு மாயை மட்டுமே என்பதையும் அடிமனதில் இருத்தி வைத்துக்கொள்ளாவிட்டால், இப்படிப்பட்ட நம்பிக்கைகள் எமது தர்க்கரீதியான சிந்தனைத்திறனை முடமாக்கிவிடும் அபாயம் இருக்கிறது. அவ்வளவுதான். 




மேலே குறிப்பிட்டவற்றில் ஏதாவது அறிவியல்ரீதியான, ஆன்மீகரீதியான அல்லது தர்க்கரீதியான பிழைகள் இருந்தால், பின்னூட்டங்களில் தொடர்ந்து கலந்துரையாடுவோம். வாருங்கள்.

No comments:

Post a Comment

DISCLAIMER

மேலே சொன்னதுல உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா அவசரப்பட்டு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவிடவேண்டாம். பின்னூட்டப்பெட்டிக்கு வாங்க, பேசலாம். எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.