Friday 29 May 2015

யாழ். மாணவி கொலை - பின்விளைவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் 18 வயதான மாணவியொருவர் கடந்த மே 13 ஆம் திகதி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் அதற்கு நீதி கோரி பல போராட்டங்கள் இடம்பெற்று வருகிறமையும் பலரும் அறிந்தமையே. அதையே சாக்காக வைத்து ஊரிலுள்ள ரௌடிக்கூட்டம் எல்லாம் "நாங்களும் போராடுவோம்ல!" என வீதிக்கொரு டயரை கொளுத்திக்கொண்டு திரிவதும் அரசியல்வாதிகள் + சட்டத்தரணிகள் நகைச்சுவை அறிக்கைகளை அடித்துவிடுவதையும் பலரும் கவனித்திருக்கலாம்.

இதுபோன்ற பாலியல் துஷ்பிரயோக வழக்குகளுக்கு நீதி வழங்கும் முறை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் புங்குடுதீவில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் நிகழ்ச்சிகள் யாழ்ப்பாண சமூகத்தின் பிற்போக்கு மனப்பான்மையையும், உண்மை நிலையையும் தெளிவாக காட்டுகின்றன.

ஆரம்ப ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு பாடசாலையும் தனித்தனியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளத் துவங்கின. இதற்கிடையில் காவல்துறை மூன்று சந்தேக நபர்களை அடுத்த நாளே கைது செய்திருந்தார்கள். அந்தக் கைதுகளுக்குப் பின்னிருந்த புலனாய்வு விபரங்கள் வெளியிடப்படவில்லை. உடனே, பாடசாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவியர் மட்டுமன்றி, ஆசிரியர்களும்கூட "சந்தேக நபர்களை விசாரிக்காமல் தூக்கிலிடவேண்டும்", "சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் (வக்கீல்) ஆஜராகக் கூடாது." என்றெல்லாம் கூச்சலிடத் தொடங்கிவிட்டார்கள். எப்படி இருக்கிறது நீதி? இப்படி எல்லாவற்றையும் கருப்பு வெள்ளையாக பார்க்கும் விதமாகத்தான் யாழ்ப்பாணப் பொதுமக்களின் மனப்பக்குவம் இருக்கிறது.

இலங்கையில் மரணதண்டனை யாப்பில் இருந்தாலும், பல தசாப்தங்களாக (1976 முதல்) யாரும் தூக்கில் இடப்படவில்லை. எனவே, மனிதாபிமானத்துக்கு முரணான மரணதண்டனை இலங்கையில் நடைமுறையில் இல்லை என்றே கூறலாம். "இப்படி ஓரிருவரைப் பிடித்து தூக்கில் போட்டால், அது மற்றவர்களுக்கு பாடமாக அமையும்" என்பது மரணதண்டனையை ஆதரிப்பவர்களது வாதம். அந்த விவாதம் ஒருபுறம் இருக்க, போலிஸ் சந்தேகத்தின் பேரில் கைது செய்தவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பதைக்கூட கண்டுபிடிக்காமல் அவர்களை தூக்கிலிடவேண்டும் என கோஷங்கள் எழுகின்றன. அவர்களில் ஒருவரேனும் நிரபராதியாக இருந்தால், (கவனிக்க:இருந்தால்) அவரால் ஒரு நல்ல வக்கீலை வைத்துக்கூட தன் தரப்பு நியாயத்தை வெளியிடக்கூடாது என்கிறார்கள் பொதுமக்கள். 'அப்படியில்லை, கைதுசெய்யப்பட்ட அனைவருமே நிச்சயமாகக் குற்றவாளிகள்தான்' என அடித்துக்கூறும் அளவுக்கு நம் காவல்துறைமீது நம்பிக்கை எப்படி வந்தது என்று புரியவில்லை. அதாவது, நம் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், தமிழ் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் நிறைந்த யாழ் நீதித்துறையை விட சிங்கள அதிகாரிகள் நிறைந்த காவல்துறை மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது!!


இதுதவிர, யாழ்ப்பாணம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் துவங்கியதும், வீட்டில் வெட்டியாக இருந்த இளைஞர்களுக்கும், உள்ளூர் ரௌடிகளுக்கும் அடித்தது அதிஷ்டம். ஆளுக்கொரு டயரும் தீப்பெட்டியுமாக "போராடுவதற்கு" களத்தில் குதித்துவிட்டார்கள்.அவர்கள் நடத்திய போராட்டங்களில் "போராடுவோம் போராடுவோம்..." என்பதற்குப் பிறகு என்ன கூவுகிறார்கள் என்பதுகூட புரியவில்லை. அரச அதிபர் அலுவலகத்தை (கச்சேரி) முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டம் உட்பட இந்த ஆர்ப்பாட்டங்களில் குரல் கொடுத்த வாலிபர்களில் 90 வீதமானவர்களுக்கு அந்த மாணவியைப் பற்றியோ, பெண்ணுரிமை பற்றியோ கவலையில்லை என்று அடித்துக் கூறலாம். அதைவிடக் கொடுமை என்னவென்றால், இதில் பெரும்பாலானவர்கள், இருட்டும் நேரத்தில் கையில் சிகரட் / போத்தல்களுடன் நாற்சந்திகளில் நின்று பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கும் மைனர்களே. டயர்களை எரிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் குஷியாகி இவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க வந்திருக்கிறார்கள்!

இவர்கள் கொளுத்தும் டயர்களை மாலை வேளையில் ஒவ்வொன்றாக அணைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதைத்தவிர காவல்துறைக்கு வேறு வழி இருக்கவில்லை. தடுத்தாலோ, கலைத்தாலோ அடுத்த நாள் காலையில் யாழ் தினசரிகளின் தலைப்புச் செய்தியாக "சிங்களப் போலீசாரின் அராஜகம்: யாழ் இளைஞர்களின் நீதிகோரிய ஜனநாயக ஆர்பாட்டங்களின்மீது வன்முறையைக் கட்டவிழ்த்த பேரினவாதிகள்!" என்பது கொட்டை எழுத்துக்களில் வெளியிடப்படும். இதற்குப் பயந்து அமைதியாக இருந்த காவல்துறைக்கும் ஒருவழியாக அதிர்ஷ்டம் அடித்தது. சந்தேகநபர்கள் யாழ் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுகிறார்கள் என்று தெரிந்ததும், ஊரெல்லாம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கூட்டம் கடைசியாக யாழ் நீதிமன்றத்தையும் முற்றுகை இட்டதுடன் தங்கள் எல்லையை மீறியது. போலீசாரின் தடைகளை உடைத்துக்கொண்டு நீதிமன்ரைச் சுற்றிக் குழுமிய கூட்டத்தில் கத்திக்கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒருவன் கல்லை எடுத்து வீசுகிறான். உடனே குஷியாகிவிட்ட மற்ற கட்டாக்காலிகளும் ஆளுக்கொரு கல்லைப்பொறுக்கி வீசி நீதிமன்றக் கண்ணாடிகளை உடைக்கிறார்கள். உடனே யாழ் நீதியரசர் அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவிடுகிறார். அதுவரை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையும் இராணுவமும் கண்ணீர்ப்புகை வீசுகிறார்கள். நீதிமன்றை அவமதித்ததான குற்றச்சாட்டில் அங்கு கூடியிருந்த 127 பேர் (அதில் 30 க்கும் மேல் பள்ளி மாணவர்கள்) கைதுசெய்யப்படுகின்றனர்.

நீதிமன்றம் முன்பு நிகழ்ந்தவை (வீடியோ)

இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது, சுவிஸ் நாட்டு ஈழத்தமிழர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், அவர் நாட்டைவிட்டு தப்பிப்பதற்கு கொழும்பைச் சேர்ந்த சட்டத்துறை பேராசிரியர் (தமிழர்) உதவினார் எனவும், யாழ் வக்கீல்கள் சிலரும் இதற்கு உடந்தை என இணையத்தில் செய்திகள் வெளியாகின. உடனே கொதித்தெழுந்த யாழ் வக்கீல்கள் தொலைகாட்சியில் ஒருமணிநேரம் நீண்ட அறிக்கை ஒன்றை வழங்கினர்.

வக்கீல்களின் அறிக்கை - சுருக்கப்பட்ட ஆங்கில அறிக்கை

அவர்கள் பேசியதின் சாராம்சம் இதுதான்: "சுவிஸ்காரரை தப்புவிக்க முயன்ற கொழும்புத் தமிழர் ஒரு வக்கீல் அல்ல. அவர் ஒரு சட்டத்துறை பேராசிரியர் மட்டுமே. மற்றபடி, யாழ் வக்கீல்களான நாங்கள் மக்களாகிய உங்கள் நலனுக்காகவே உயிர்வாழ்கிறோம். போர் நடந்த நேரத்திலும் எங்கள் உயிரை துச்சமாக மதித்து, இராணுவத்துடனும் போலீசுடனும் நாம் போராடியிருக்கிறோம்(?!). எங்களைப் பற்றி அவதூறு எழுதுவதற்கு இணைய எழுத்தாளர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த வழக்கில் நீதி கிடைப்பதற்கு நாம் அனைவரும் சேர்ந்து போராடுவோம். அடுத்ததாக, நீதிமன்றம் சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஆனால், அதற்கு யாழ் மக்களின் நடத்தையைக் குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் இது சிங்களப் பேரினவாதிகள் செய்த சதி (?!). ஒரு சில தமிழர்களுக்கு போதையேற்றி அழைத்துவந்து கல்லெறிய வைத்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் குழுக்களும் இருக்கலாம்."

இந்தப் பேட்டியைப் பார்த்து ரசித்து வீட்டில் அனைவரும் சிரித்துக்கொண்டிருந்தோம். கடந்த காலங்களில் நிகழ்ந்த பாலியல் கொடுமைகள் சம்பந்தப்பட்ட வழக்கில், இதே சட்டத்தரணிகள் எந்த முனைப்பும் காட்டவில்லை. போர் நேரத்தில் இவர்கள் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடினார்களாம்!! நீதிமன்றத்துக்கு கல்லெறிந்ததும் ஆர்ப்பரித்ததும் ஈழத்து வெட்டிப் பயல்கள்தான் என்ற உண்மையைச் சொன்னால் பிரச்சனை வரும் என்பதற்காக, இதையும் சிங்களவர்கள் மீதே சாட்டுகிறார்கள். தங்கள் மீது விழுந்த பழியை மறைக்க, வழக்கமான பூச்சாண்டியான சிங்களவர்களை இதற்குள் இழுத்து, தமிழ் மக்களின் கவனத்தை இப்படி திசைதிருப்புகிறார்கள் என்பது சிலருக்கு புரிந்திருந்தது.

இவர்கள் இப்படி சிங்களவர்களை குற்றம்சாட்டும் நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ "புலிகள் இயக்கமும் இப்படித்தான் ஆரம்பித்தது. இந்த ஆர்ப்பாட்டங்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மீண்டும் புலிகள் தலைஎடுப்பார்கள். தற்போதைய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இலங்கையில் உடனடியாக ஆட்சி மாற்றம் அவசியம்." என்கிறார். இவரும், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், தனது செல்வாக்கு சரியும்போதெல்லாம் "புலி வருது, புலி வருது" என்று பயங்காட்டியே சிங்கள மக்களை ஏமாற்றி காலத்தை ஓட்டுகிறார் என்பதும் படித்த சிங்கள மக்களுக்கு புரிந்திருக்கிறது.

இந்த நிகழ்வின் விளைவாக பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும், இலங்கையின் வேறு இடங்களில் (வவுனியா, மட்டக்களப்பு) ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து அமைதியான முறையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் மலையகத் தமிழர்கள் வாழும் பகுதியான நுவரெலியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுவே, மலையகத்தில் ஒரு பெண்பிள்ளைக்கு இதே நிலை ஏற்பட்டிருந்தால், யாழ் மக்கள் அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள். காரணம், வடபகுதி தமிழர்கள் மலையகத் தமிழர்களை தமிழர்களாகவே, ஏன் மனிதர்களாகவே மதிப்பதில்லை. "தோட்டக்காட்டான் சம்பாதிக்கிற காசையெல்லாம் குடிச்சு அழிச்சிட்டு போதைல இப்படிச் செஞ்சிருப்பான். சாதி குறைஞ்ச தோட்டக்காட்டு நாய்களே இப்படித்தான்" என்று யாழ்ப்பாண வீடுகளில் (ஏன், என்னுடைய வீட்டிலேயே) பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். இப்போது உயர் சாதிக்காரர்களான தங்களில் சிலரே தங்களில் ஒருத்தியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதால் ஒன்றும் பேசாமல் இருக்கிறார்கள்.

இப்படியாக, "சந்தேக நபர்களை விசாரிக்காமல் தூக்கில் போடவேண்டும்" எனும் கோஷங்களுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் கடந்த நான்கு வாரங்களிலேயே, இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் புதிதாக நிகழ்ந்திருக்கின்றன!! ஒருசிலரைத் தூக்கில் போட்டால் குற்றம் குறைந்துவிடும் என்பவர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இலங்கையில் பாலியல் வன்கொடுமை பற்றிய புள்ளிவிபரங்கள் மிரளவைக்கின்றன. ஐநா நடத்திய ஆய்வொன்றின் தீர்வுகள் இதோ: ஒட்டுமொத்த ஆண்களில் 14 வீதத்துக்கும் மேலானவர்கள் குறைந்தது ஒரு பெண்ணையாவது கற்பழித்திருக்கின்றனர்! 3 வீதமான ஆண்கள் இன்னொரு ஆணைக் கற்பழித்திருக்கின்றனர். கற்பழித்த ஆண்களில் 96.5  வீதமானவர்கள் சட்டத்திலிருந்து தப்பிவிட்டனர். 65.8 வீதமானவர்கள் எந்தக் குற்ற உணர்வையும் உணரவில்லை!  11 வீதமானவர்கள் நான்குக்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்திருக்கிறார்கள்!!

தினமும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் நடந்துகொண்டிருந்தாலும், இந்தப் பெண், டெல்லியில் கற்பழிக்கப்பட்ட பெண் போன்ற ஒரு சிலருக்காக மட்டும் ஏன் மக்கள் கொதித்தெழுகிறார்கள் எனும் கேள்விக்கு விடையை இந்தக் கட்டுரையில் கட்டுரையாசிரியர் தந்திருக்கிறார். படித்துப் பார்க்கலாம்.

எனது புரிதல்படி, பாலியல் வன்கொடுமைகளுக்கான நீண்டகாலத் தீர்வு மக்களின் பொதுமனநிலையை மாற்றுவதேயாகும். பெண்களை பொருளாக நினைக்கும், பெண்கள் ஆண்களின் பாதுகாப்பில் அடங்கி இருக்கவேண்டும் என எண்ணும், திருமணத்துக்கு உட்பட்ட பாலியல் கொடுமைகளை ஏற்றுக்கொள்ளும் பிற்போக்கு மனநிலை, 92% கல்வியறிவு கொண்ட நாட்டில் காணப்படுவது, நமது கல்விமுறை சரியான விதத்தில் வேலை செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது. முறையான பாலியல் கல்வி மாணவர்களுக்கு புகட்டப்படவேண்டும். ஆண்துணையுடன் பெண்களை அனுப்பும் நிலை மாறி, பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இரவு நேரங்களிலும், தனியான இடங்களிலும் காவல்துறையினால் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதெல்லாம் நடந்தால் இலங்கையிலும் இராம ராஜ்ஜியத்தை எதிர்பார்க்கலாம்.

Sunday 3 May 2015

Cube (1997) - திரைப்படம்


இந்தப்படம், நான் இதுவரை பார்த்த, விமர்சித்த படங்களிலிருந்து மிகவும் வேறுபட்டது. பார்வையாளனின் தனித்துவமான புரிதலை முன்னிறுத்தும், ஒரு abstract art –க்கு ஒப்பாக, இருத்தலியம் (Existentialism), பின்நவீனத்துவம் (Neomodernism) போன்ற எனக்குப் பரிச்சயமில்லாத சில பகுதிகளுக்குள் பயணிக்கிறது. இருந்தும், இந்த வார்த்தைகளைக் கேட்டாலே காததூரம் ஓடிவிடும் தற்குறியான என்னையே ஈர்த்து, சிந்திக்கவைத்ததால், இப்படத்தைப் பற்றி எழுத முனைகிறேன். இலக்கிய ரசிகர்கள் கண்ணில் ஏதேனும் சொற்பிழை / பொருட்பிழை தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், திருத்திவிடுகிறேன். 


முதல் பத்து நிமிடங்கள்


ஒரு வயதானவர் ஒரு பூட்டிய அறைக்குள் கண்விழிக்கிறார். அந்த அறை 14x14x14 அடி கனசதுரமாக, சுவர்கள் முழுவதும் வினோத குறியீடுகள் நிறைந்து, நீல நிறத்தால் ஒளியூட்டப்பட்டிருக்கிறது. கனசதுர அறையின் ஆறு பக்கங்களிலும் ஒவ்வொரு, ஒரே மாதிரியான, பூட்டப்பட்ட, திறக்கக்கூடிய சதுரக்கதவுகள். ஒரு கைதியைப் போல உடை மற்றும் பெயர்த் தகடு அணிந்திருக்கும் அவருக்கு இந்த அறை பற்றிய எவ்வித முன்நினைவும் இல்லை. ஒரு கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறார். அடுத்த பக்கத்திலும் இதே போன்ற, ஆனால் சிவப்பு நிற அறை தெரிகிறது. கதவைப் பூட்டிவிட்டு, இன்னொரு கதவைத் திறந்தால், அங்கேயும் இதே போன்ற, ஆனால் பிரவுன் நிற அறை! கதவைத் தாண்டி, அந்த அறைக்கு செல்கிறார்.... அங்கே: ஷ்ஷ்ஷ்க்க்க்..... அவ்வளவுதான், அந்தச் பிரவுன் அறைக்குள் இருந்த, கண்ணுக்குத் தெரியாத, கூரிய இரும்பு வலையொன்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் அறுக்கப்பட்டு, அவரது உயிரற்ற உடல் பல துண்டுகளாக விழுந்து சிதறுகிறது!!


கதை: அறிமுகம்


இப்போது, இன்னொரு அறைக்குள் படம் துவங்குகிறது. இதுபோன்ற வெவ்வேறு அறைகளுக்குள் தனியாக விழித்தெழுந்து, ஒன்றும் புரியாமல், அடுத்தடுத்த அறையாக முன்னேறி, சில அறைகளில் காத்திருக்கும் ஆபத்துக்களிலிருந்து சில காயங்களுடன் தப்பித்த ஆறு அந்நியர்கள் ஒரு அறைக்குள் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். வெவ்வேறு மனநிலைகள், நம்பிக்கைகள் கொண்ட அவர்கள்: ஒரு போலீஸ்காரர், ஒரு டாக்டர் (பெண்), ஒரு இன்ஜினியர், ஒரு பன்னிரண்டு வயது சிறுமி மற்றும் ஒரு மனநோயாளி. 

இந்த வினோதமான சூழ்நிலையில் திடீரென சிக்கிக்கொண்ட இவர்களை பயமும் குழப்பமும் ஆட்டுவிக்கிறது. இந்தச் சூழலை இவ்வளவு பொருட்செலவு செய்து யார், ஏன், எப்படி உருவாக்கினார்கள், அதில் ஏன் தங்களைச் சிக்கவைத்தார்கள் எனும் கேள்வி அவர்களிடையே எழுகிறது. “இது நிச்சயம் அரசாங்கத்தின் வேலைதான். மக்களின் பணத்தை வைத்து இரகசியமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்”, “இது வேற்றுக்கிரகவாசிகளின் ஒரு சோதனையாக இருக்கலாம்” என்றெல்லாம் அந்த டாக்டர் பெண்மணி யூகிக்கிறாள். “இந்தக் கேள்விகள் எல்லாம் தேவையற்றவை. இந்தச் சூழலை விட்டு உயிருடன் வெளியேறுவது எப்படி என்பதுதான் நமது உண்மையான பிரச்சனை. ஒரு குழுவாக செயற்பட்டால், நம்மால் இங்கிருந்து வெளியேற முடியும்.” என்று சொல்லி, ஊக்கப்படுத்தி, குழுவை அந்தப் போலீஸ்காரன் வழிநடத்துகிறான்.

இப்படியாக அடுக்கப்பட்டிருக்கும் அறைகளில், சில அறைகள் மட்டுமே எந்த ஆபத்தான பொறிகளும் இல்லாத, பாதுகாப்பான அறைகள். மற்றயவற்றில் விதவிதமான பொறிகள் காணப்படுகின்றன. சத்தம், அசைவு, உடலின் இரசாயன மணம் என வெவ்வேறு விதமாக தூண்டப்படும் பொறிகள் உள்ள அறைகளுக்குள் நுழைந்தால் மரணம் காத்திருக்கிறது. அடுத்துவரும் ஒவ்வொரு அறையும் பாதுகாப்பானதா, இல்லையா என கண்டறிந்து முன்னேறுவதுதான் சவால். ஒவ்வொரு அறைகளின் எண்களிலும் சில எளிய மர்மங்கள் ஒளிந்திருப்பதையும், அதை வைத்து ஒரு அறை பாதுகாப்பானதா இல்லையா என கண்டுபிடிக்கலாம் என, மனக்கணிதத்தில் கில்லாடியான அந்தச் சிறுமி புரிந்துகொள்கிறாள். அவளது உதவியால், அவர்கள் பல அறைகளைக் கடக்கிறார்கள். இருந்தும், பாதுகாப்பானது என கண்டறிந்த ஒரு அறையில் பொறி இருப்பதைப் பார்த்ததும், அந்த எண்களின் மர்மங்கள் அவ்வளவு எளிதானவை அல்ல என்பது புரிகிறது. அந்தச் சிக்கலான மர்மங்களையும் அந்தச் சிறுமியின் உதவியுடன் புரிந்துகொண்டு, அடுத்தடுத்த அறையாக முன்னேறுகிறார்கள்.

இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது, அந்த இன்ஜினியர், இந்த வினோத பொறிமுறையின் ஒரு பகுதியை வடிவமைத்திருக்கிறான் எனத் தெரிய வருகிறது. அவனை விசாரிக்கும்போது, “இது யாராலும் திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. இது ஒரு மாபெரும் விபத்து. இப்பொறிமுறைகள் எப்படி, ஏன் இயங்குகிறன என்பது எந்தத் தனிமனிதனுக்கும் முழுதாகத் தெரியாது. இதற்கு உள்ளே சிக்கிக்கொண்ட எமக்கு மட்டும்தான் இது எப்படி இயங்குகிறது என்பது ஓரளவாவது தெரிந்திருக்கிறது. புரிகிறதா?” என்கிறான். இப்படியே போகும்போது, இந்த வினோத சூழ்நிலையின் மன அழுத்தம் காரணமாக, குழுவினருக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. வாக்குவாதம் முற்றி, போலீஸ்காரன் டாக்டரை கொலை செய்துவிட்டு, சிறுமியை பலாத்காரம் செய்ய முயல்கிறான்! அவனை அடித்துப்போட்டுவிட்டு மற்றவர்கள் முன்னேறுகிறார்கள். அவர்கள் வெளியேறினார்களா இல்லையா என்பதே கதை.

எனது புரிதல்


இந்தப் பொறிமுறை யாரால், ஏன் உருவாக்கப்பட்டது? இவர்கள் ஏன் இதில் சிக்கிக்கொண்டார்கள்? எனும் கேள்விகளுக்கான பதில்கள் படத்தில் இல்லை! இப்படத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பது பார்வையாளனின் சுதந்திரத்துக்கே விடப்படுகிறது. எனது புரிதலின்படி, இந்தப் பொறிமுறையானது நாம் வாழும் இந்த உலகத்தைக் குறிக்கலாம். ஏன் பிறந்தோம் என்று தெரியாமல், வெவ்வேறு நம்பிக்கைகள், மனநிலைகள் கொண்ட அந்நியர்களான நாம் இங்கே கூட்டாக சிக்கிகொண்டிருக்கிறோம். உலகம், ஒரு கடவுளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? அப்படியானால் ஏன் உருவாக்கப்பட்டது? அல்லது அந்த இன்ஜினியர் சொல்வதுபோல, இதுவொரு மாபெரும் விபத்தின் விளைவா? இதிலிருந்து வெளியேற முடியுமா? வெளியே என்னதான் இருக்கிறது? என்ற கேள்விகளை நம்மில் சிலர் தீவிரமாக விவாதிக்கிறோம். உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவியல் ஆராய்கிறது. அந்தச் சிறுமி செய்வதுபோல, முதலில் எளிய கொள்கைகளில் ஆரம்பித்து, நம் பிழைகளைத் திருத்திக்கொண்டு, படிப்படியாக சிக்கலான கொள்கைகளுக்கு முன்னேறுகிறோம். அதேநேரத்தில், இவ்வளவு யோசிக்காமல், இந்த நொடியில் என்ன செய்ய வேண்டும் எனும் முடிவுகளை உடனடியாக எடுக்கும் நிர்ப்பந்தத்திலும் இருக்கிறோம். இந்த வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள எமக்கு பிறரின், சமூகத்தின் உதவி தேவைப்படுகிறது. நம் நண்பர்களும் எதிரிகளும் காலத்துக்கேற்ப, சூழ்நிலையின் அழுத்தத்திற்கேற்ப மாறிக்கொண்டிருக்கிறார்கள். நாம், நம் சூழ்நிலை மற்றும் சமூகத்தினூடாக எங்கேயோ பயணித்துக்கொண்டிருக்கிறோம். எனவே, இந்தப் படம், மனித வாழ்வின் அபத்தங்களை பிரதிபலிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். 

இதுதவிர, இணையத்தில் தேடினால் பலரும் பல்வேறு விதமாக இதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பத தெரிகிறது. சிலரின் புரிதல்படி, நம்மைச்சுற்றி நாமே உருவாக்கிக்கொள்ளும் சூழ்நிலைச் சிறைகளை இப்படம் உருவகப்படுத்துகிறது. இப்படியாக, பார்வையாளனின் புரிதலை மட்டுப்படுத்தாமல், ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களூடாக தனித்துமாக புரிந்துக்கொள்ளக்கூடியதாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

என்னைப்பொறுத்தவரை, அந்தப் பொறிமுறையின் மர்மங்கள் மர்மமாக விடப்படுவதே படத்தின் மிகப்பெரிய பலமாகும். அதுவே, நம் சிந்தனையைத் தூண்டி, இப்படத்தை ஒரு சாதாரண அறிவியல் புனைவு எனும் நிலையிலிருந்து இன்னொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்கிறது. இருந்தும், இப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இரண்டு படங்களில் [Hypercube (2002), Cube Zero (2004) ] இந்த மர்மங்கள் விளக்கப்படுகின்றன. அவை, இதன் தரத்தை தாழ்த்துகின்றனவா இல்லையா என்பது தெரியவில்லை. 

Verdict


பொழுதுபோக்காக படம் பார்க்கும் ரசிகர்கள் மற்றும் தலையில் முடி அதிகம் இல்லாதவர்கள் இப்படத்தைத் தவிர்ப்பது நலம். என்னைப்போல வெட்டியாக இருப்பவர்கள், சில நாட்களுக்கு உட்கார்ந்து யோசிக்க வேண்டுமானால் தரவிறக்கிப் பார்க்கலாம். அதைவிட, நம் Baskar சார், வரசித்தன் சார் போன்ற இலக்கியவாதிகள் இப்படத்தைப் பார்த்தால், இதில் இன்னும் பல பரிணாமங்களை நிச்சயம் கவனிக்கமுடியும். அப்படிப் புரிந்துகொண்ட விஷயங்களைப் பகிரமுடிந்தால் இன்னும் நல்லது. J

My Rating: 9/10

Saturday 25 April 2015

ஓசியில் சாப்பிடுதல் - அனுபவங்கள்

வெசாக் என்பது மே மாத பௌர்ணமியில் இலங்கை முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு பௌத்தப் பண்டிகை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். வெசாக் கொண்டாட்டங்களின் ஒரு முக்கியமான கூறு வெசாக் தன்சல்கள் எனப்படும் ஒருவித அன்னதானங்கள். வெசாக் காலத்தில், முன்னிரவு வேளைகளில் பொது இடங்களில் பொதுமக்கள் குழுவாக திட்டமிட்டு தயாரித்து, இலவசமாக வழங்கும் உணவுவகைகளை டை கட்டி காரில் வந்து இறங்கும் ஹை-டெக் குடும்பங்கள்முதல், இளைஞர்கள், முதியவர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுவதை காணமுடியும். “பார்த்தா படிச்ச பெரிய மனுஷனா இருக்கியே, ஓசில வாங்கி சாப்பிடறதுக்கு வந்துட்ட...” என்று யாரும் முகம்சுளிக்காமல் எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவதுதான் இங்கே சிறப்பு. 

மரவள்ளி அவியல் + சம்பல்
இப்படியாக, கொஞ்சம் பாரம்பரியமான தன்சல்களில், சம்பலுடன் மரவள்ளிக்கிழங்கு அவியல், கஷாயக் கோப்பி, பாற்சோறு, கறிசோறு போன்ற பொதுவான பாரம்பரிய உணவுகளும், இளைஞர்களால் நடத்தப்படும் தன்சல்களில் ஐஸ்க்ரீம், ஜூஸ் வகைகள், சான்ட்விச், ரோல்ஸ், சமோசா, டீ, கோப்பி, சில வேளைகளில் தோசை என உடம்பில் ஜீரணமாகக்கூடிய எல்லா உணவுகளும் கிடைக்கும். கண்டி நகரம் முழுதும் சிதறிக்கிடக்கும் இந்த தன்சல்களுக்கு திக்விஜயம் செய்து, ஓசியில் சாப்பிடுவதற்காகவே ஒவ்வொரு வருஷமும் திட்டமிட்டு ஒரு ஐந்தாறு நண்பர்கள் சேர்ந்த கூட்டமாக இரவில் வேட்டைக்குப் புறப்படுவது இளைஞர்கள் மற்றும் நம்மைப்போன்ற பள்ளி மாணவர்களின் வழக்கம்.


இப்படி, நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, எனது பள்ளி வழக்கம்போல தன்சல் ஏற்பாடு செய்தது. பள்ளிக்கு முன்னால் தகரக் கூரை போட்டு அதற்குள்ளே மேஜை வைத்து, பள்ளியின் பல்வேறு சங்கங்கள் அடுத்தடுத்தாக தன்சல்கள் வைப்பது என ஏற்பாடு. உணவுக்கான செலவை அந்தந்த வாலிபர் சங்கங்களே கைக்காசைப் போட்டு பார்த்துக்கொள்ளவேண்டும். விட்டால், ஒட்டுமொத்த சாப்பாட்டையும் நம்மாட்களே முடித்துவிட்டு மற்ற தன்சல்களை வேட்டையாடக் கிளம்பிவிடும் அபாயம் இருந்ததால், ஆசிரியர்களும் அதிபரும் டீ-சர்ட், ஷார்ட்ஸ் மாறுவேடத்தில் மேற்பார்வை பார்க்கத் தயாராக இருந்தனர். நம் இன்டராக்ட் சங்கத்துக்கும் அங்கே ஒரு தன்சல் தரப்பட்டது. நாங்கள் வைப்பது, வெசாக் வரலாற்றில் யாரும் வைக்காத தன்சலாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரின் மூளை கசக்கப்பட்டு, கடைசியில் ஐஸ்க்ரீம் தன்சல் வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முதல்தான், நான், என்னுடைய அணிசேராக் கொள்கை மற்றும் என் வாயின் நீளம் காரணமாக அந்தச் சங்கத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தேன். இருந்தும், என் நண்பர்கள் எல்லாரும் அங்கே இருந்ததாலும், அன்று வெசாக் நேரத்தில் இரவில் கண்டி நகரத்தில் சுற்றுவதற்கு ஒரு காரணம் கிடைக்கிறது என்பதாலும் அந்த ஐஸ்க்ரீம் தன்சலுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதென அறிக்கை விட்டிருந்தேன்.

வெசாக்குக்கு முதல்நாள் நம் தன்சல் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அருகிலிருக்கும் ஸ்ரீ ரம்யா உணவகத்துக்கும் பள்ளிக்குமாக கையில் ஐஸ்க்ரீம் வாளிகளுடன் ஓடும் பொறுப்பை ஆரம்பத்தில் என்னை நம்பி கையளித்தார்கள்! இருட்டில் போகும்போது முகமூடி போடாத கொள்ளையர்கள் ஐஸ்க்ரீம் வாளியை குறிவைத்து தாக்கும் அபாயம் இருப்பதால், அந்த வேலையிலிருந்து கொஞ்ச நேரத்தில் நழுவி, நிகழ்வை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். பார்த்தால், ஐஸ்க்ரீம் தருகிறார்கள் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவி யட்டிநுவர வீதியில் எங்கள் பள்ளியிலிருந்து கொழும்பு வீதிச் சந்தி வரை (ஒரு ஐநூறு மீட்டருக்கு) அனுமார் வாலாக மக்கள் வரிசை நீண்டிருந்தது. “நம்ம சங்கத்தோட பெருந்தன்மை பற்றி உங்க பொன்னான கருத்து என்ன?” எனும் ரீதியில் அவர்களின் ரியாக்ஷன்களை படமெடுத்துக் கொண்டிருந்தேன். 

கொஞ்சநேரம் சில்லறை விற்பனையாக ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் என கொடுத்துக்கொண்டிருந்த நம்மவர்கள், திடீரென உற்சாகம் தலைக்கேறி, ரோட்டில் போகும் கார், வேனையெல்லாம் மறித்து “ஐஸ்க்ரீம் வேணுமா ஐஸ்க்ரீம்??” என கூவத் தொடங்கினார்கள். ஐஸ்க்ரீம் தின்னக் கூலி வேண்டுமா? எல்லாரும் காரை ரோட்டில் நிறுத்தி ஐஸ்க்ரீமை வாங்கத் தொடங்க போக்குவரத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. இப்படியே கொஞ்ச நேரம் போனதும், இத்தகைய திடீர் மொத்த விற்பனை காரணமாக நாங்கள் வாங்கி வைத்திருந்த ஐஸ்க்ரீம் முழுதும் முடிந்துவிட்டது! நாங்கள் அதிர்ந்தாலும், பள்ளி நிர்வாகம் கவலைப்படவில்லை. உடனடியாக தன்சலை இன்னொரு சங்கத்துக்கு கையளிக்க, அவர்கள் தாங்கள் திட்டமிட்டு வைத்திருந்த மரவள்ளிக்கிழங்கை அவித்து வழங்கத் தொடங்கினர். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்த நாங்கள் பின்வழியாக தப்பிவிட்டோம். “இங்க ஐஸ்க்ரீம் இல்லையாம்டா, வெறும் அவிச்ச கிழங்கு மட்டும்தானாம்.” என செய்தி பரவத் தொடங்கியதும், வரிசையில் நின்றவர்களுக்கு கடுப்பாகிவிட்டது. “டேய்... ஐஸ்க்ரீமுக்காக முக்கால் மணிநேரம் கால்கடுக்க கியூல நின்னா, அவிச்ச கிழங்கைத் தாறீங்களேடா... அடுத்த தெருவுல ஒரு கிழங்கு தன்சல் ஈயாடுது. அங்கேயே போய் இதை தின்னிருப்போமேடா... உங்களுக்கெல்லாம் அந்த ஆண்டவன் வச்சிருக்காண்டா” என்றெல்லாம் சிலர் காண்டாகி கத்த ஆரம்பித்தார்கள். கிழங்குச் சங்கத்தினர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிந்ததும், “இந்த ஸ்கூல் பசங்களே இப்படித்தான்” என்றபடி கூட்டம் கலைந்துவிட்டது.



அடுத்த வருஷம் தன்சல் வேலை இல்லாததால், வேட்டைக்குப் புறப்படுவது என முடிவு செய்தோம். தன்சல் வேட்டை என்பது சாதாரண காரியம் இல்லை. கண்டி நகரெங்கும் சிதறிக்கிடக்கும் தன்சல்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணவுதான் கிடைக்கும். எங்கெங்கே என்னென்ன உணவுகள் கிடைக்கிறன, ஒவ்வொரு தன்சலும் என்னென்ன நேரத்தில் திறந்து மூடுகின்றன எனும் தகவல்களை சேகரிப்பது குதிரைக் கொம்பு. அதில், கூட்டம் குறைவான தன்சல்களை குறிவைத்து எல்லா தன்சல்களையும் விசிட் செய்யும் வழியைக் கண்டறிவது என்பது travelling salesman பிரச்சனையை விட கடினமானது. இருந்தும் மனம் தளராமல், எல்லாரையும் ஒருங்கிணைத்து வேட்டைக்கு புறப்படுவதற்கு மாலை ஆறரை ஆகிவிட்டது.

நகரம் முழுதும் நடந்து ஜூஸ், கோப்பி, மரவள்ளி என முன்னேறிக்கொண்டிருக்கும்போது நம் புலனாய்வு நெட்வொர்க்கிலிருந்து ‘அடுத்த தெருவில கொத்து ரொட்டி தரப்போறாங்கடா, ஓடியாங்க’ என அவசரத் தகவல் வந்தது. ‘கொத்து ரொட்டியா...’ என பிளந்த வாயில் ஊறிய எச்சிலுடன் ஓடினால், அங்கே, இன்னும் ஆரம்பிக்காத தன்சலில் கூட்டம் அலைமோதியது. மூன்று தெருவுக்கு வளைந்து நெளிந்த வரிசையைப் பார்த்து லைட்டாக பின்வாங்கியபடியே விசாரித்தால் அரை மணி நேரத்தில்தான் திறப்பார்கள் எனத் தெரிந்தது. 

“அரை மணில திறந்தா, நமக்கு கிடைக்க எப்படியும் ஒரு மணிக்கு மேலே ஆகும். வேற எங்கயாவது போவோமா?”

“எத்தனை மணியானாலும், கிடைக்கறது கொத்துடா டேய். கூட்டத்தை பார்த்தா சிக்கன் போடுவாங்கபோல இருக்கு. இங்கேயே நின்னுடுவோம்”


கொத்து ரொட்டி
இப்படியாக விவாதித்தத்தில், கடைசியில் கொத்துவின் மீதான ஆசையே வென்றது. அங்கேயே நிற்க ஆரம்பித்தோம். நெடுநேரம் காத்தத்தில் எங்களுக்குப் பின்னால் வரிசை கண்ணுக்கு எட்டாத தூரம் நீண்டுவிட்டது. “இத்தன பேருக்கும் கொத்து இருக்குமா?” எனும் பயம் அடிமனதை அரிக்க, “இத்தன பேருக்கும் தேவையில்ல. நாம வாங்கற வரைக்கும் இருந்தாலே போதும்” என மனதை தேற்ற ஆரம்பித்தோம். அரை மணி கடந்து, முக்கால் மணி நேரமும் கடந்து, ஒரு மணி நேரம் போய்விட்டது. இன்னும் திறந்த பாடில்லை. கொலைவெறியில் “திறந்து தொலைங்கடா டேய்... என்னடா செய்றீங்க...” என கத்தத் தொடங்கியிருந்தோம். இதற்கு மேலும் பூட்டி வைத்திருந்தால், இவர்களே கதவை உடைத்து உள்ளே வந்துவிடுவார்கள் என பயந்தோ என்னவோ, ஒருவழியாக ஒரு மணிநேர காத்திருப்புக்குப் பின், சாவகாசமாகத் கதவைத் திறந்து வழங்கத் தொடங்கினார்கள். “ஆஹா கொத்து வருது.. கொத்து வருது டோய்...” என்று சப்புக்கொட்டிக்கொண்டு திரும்பவும் ஒரு மணிநேரம் காத்திருந்தால் ஒரு வழியாக கண்ணுக்கெட்டிய கொத்து ரொட்டி கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டது. திரும்பவும் வாயில் எச்சில் ஊற ஆரம்பிக்கும்போது நம்முடைய முறையும் வந்தது.

இரண்டு மணிநேரம் பொறுமைகாத்த எங்களை நாங்களே பூரித்தபடி கையை நீட்டினால், வரிசையாக நின்ற கொத்து வள்ளல்களில் முதல் ஆள் நீட்டிய கையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் கப்பை வைக்க, அடுத்தவர் அதில் இரண்டு மேஜைக்கரண்டி கொத்துவை, அதுவும் மரக்கறிக் கொத்துவைப் போட்டு நம்மை அப்பால் தள்ளிவிட்டார். கடைசியில், “என்னடா இது?! இந்த ஒருபிடி கொத்துவை சாப்பிட ரெண்டு மணிநேரம் கால்கடுக்க நின்னிருக்கோமே!” என்று நொந்துவிட்டோம். இது ஒரு poetic justice என்று நம்மை நாமே தேற்றிக்கொண்டு, ஸ்கூல் ஜூனியர்கள் யாரும் நம்மை அடையாளம் கண்டறிந்து  சிரிப்பதற்குள் பம்மிக்கொண்டு அடுத்த கடைக்கு நகர்ந்தோம்.

Sunday 19 April 2015

எனக்குள் ஒருவன் - அலசல் (Analysis)


Disclaimer: இப்பதிவில் ஸ்பாய்லர்கள் நிறைந்திருக்கின்றன. படம் பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும். இன்னும் படம் பார்க்காதவர்கள் இதைப் படித்தால் ஒரு அருமையான அனுபவத்தை இழப்பீர்கள். எனவே ஸ்பாய்லர்கள் அற்ற அறிமுக விமர்சனத்தை இங்கே படிக்கவும்.


சினிமாவில் மிக அரிதாக, பார்வையாளனின் மூளையை மதித்து  புத்திசாலித்தனமான படங்கள் எடுக்கப்படும் அதேநேரம், புத்திசாலித்தனமாக எடுக்கிறோம் என விளம்பரப்படுத்தப்பட்டு, பார்வையாளனை ஏமாற்றும் படங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன. நோலனின் பெரும்பாலான படங்கள், சிக்ஸ்த் சென்ஸ் போன்ற படங்களை முதல் வகையிலும், Now You See Me போன்ற குப்பைகள், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்றவையை இரண்டாம் வகையிலும் அடக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு உண்மையான brainteaser ஒரு நல்ல துப்பறியும் நாவல் போல, நல்ல மேஜிக் ட்ரிக் போல இருக்கவேண்டும். கதையை சும்மா அங்கும் இங்கும் கொண்டுபோய்விட்டு, கடைசியில் “நாங்க சொன்னதெல்லாம் டூப்பு... ஏமாந்தியா???”  என்பதாக இருக்கக்கூடாது. மாறாக, படத்தின் முடிவுக்கான க்ளூக்கள் படம் முழுவதும் வைத்திருக்கப்பட வேண்டும். Hidden in plain sight! அதுவும், பார்வையாளன் முதல்முறை பார்க்கும்போது கண்டுபிடிக்கப்பட முடியாத வண்ணம் அவை இருக்கவேண்டும். படத்தின் இறுதிக் காட்சியைப் பார்த்ததும் பேயறைந்தது போல உட்கார்ந்திருக்கும் பார்வையாளனுக்கு அந்தக் க்ளூக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து அடுத்த சில நாட்களுக்கு அவனை அலைக்கழிக்கவேண்டும். படத்தை இரண்டாம் முறை பார்க்கும்போது, முற்றிலும் வேறுவிதமான கோணத்திலிருந்து, வேறொரு புதிய படத்தைப் பார்க்கும் உணர்வு வரவேண்டும். நோலனின் Prestige இந்த உணர்வுகள் அனைத்தையும் தரவல்லது. எனக்குள் ஒருவனும் இதே உணர்வுகளை தருவதாலேயே இதை ஒரு சிறந்த திரைக்கதை என்று கருதுகிறேன்.

முடிவுக்கான க்ளூக்கள்


படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல சிறு லாஜிக் மீறல்களை நாம் ஓரக்கண்ணால் கவனித்து வருகிறோம். பரம ஏழையான தியேட்டர் விக்னேஷிடம் எப்படி அரிய லூசியா மருந்தை வாங்குவதற்கு பணம் கிடைக்கிறது? லூசியாவை விற்பவர் உட்கார்ந்திருக்கும் அறையும் அவரது பாவங்களும் ஆங்கிலப் படங்கள் போல மிகச் செயற்கையாக இருக்கிறனவே? அவ்வளவு அழகான பெண் எப்படி இவனைப் போய் காதலிக்கிறாள்? ஒரே ஒரு வாரம் மட்டுமே இவனுடன் பழகிய ஐரோப்பியப் பெண்கள், அவ்வளவு பெரிய பண உதவி செய்து இவனது தியேட்டரை புதுமைப்படுத்த காரணம் என்ன?

இதைவிட பெரிய கேள்விகள் இரண்டு இருக்கின்றன.
  1. ஒன்றுமே தெரியாத வெகுளியான விக்னேஷ், அவ்வளவு சிக்கலான பிரச்சனைகள் நிறைந்த ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை எப்படி தத்ரூபமான கனவாகக் காண்கிறான்?
  2. கனவுகள் கருப்பு வெள்ளையில் வருகின்றன என்பது காலம் கடந்த ஒரு நம்பிக்கை. நம்மில் பெரும்பாலானோர் கலரில் தான் கனவு காண்கிறோம் என அறிவியலில் உறுதிப்படுத்திவிட்டார்கள். இருந்தும், கனவுக் காட்சிகளை ஏன் கருப்பு வெள்ளையில் காட்டுகிறார்கள்?

இப்படியான கேள்விகள் படம் பார்க்கும்போது உதித்தாலும், கதையின் வேகத்தால் அவற்றை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தமிழ் சினிமாவில் லாஜிக் மீறல்கள் சகஜம்தானே எனும் உணர்வு இதையெல்லாம் தாண்டச் செய்கிறது.

இருந்தும், இதெல்லாம் லாஜிக் மீறல்களே இல்லை, மாறாக படத்தின் முடிவில் வரும் அட்டகாசமான ட்விஸ்டுக்கு இந்தக் கேள்விகள்தான் க்ளூவாக வருகின்றன என்பது புரியும்போது, இவ்வளவு திறமையாக நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது தெரியும்போது வரும் உணர்வுக்காகத்தான் இந்த மாதிரிப் படங்களை நாம் பார்க்கிறோம்.

கறுப்பு வெள்ளை & கலர் 


நோலனின் மெமெண்டோ படத்திலும், இதுபோன்ற (ஆனால் இன்னும் சிறப்பான) நான்-லீனியர் முறையில் கதைசொல்லும்போது காட்சிகளின் தொடர்ச்சியை பார்வையாளனுக்கு புரியவைப்பதற்கு கருப்பு-வெள்ளை & கலர் காட்சிகள் எனும் முறை உபயோகிக்கப்பட்டது. மனிதர்கள் கருப்பு-வெள்ளையில்தான் கனவு காண்கிறார்கள் என்றும் சிலகாலமாக அறிவியலில் நம்பப்பட்டு வந்தது. எனவே, இப்படத்திலும் கனவையும் நனவையும் வேறுபடுத்துவதற்காகவே இந்த முறை பயன்படுகிறது என்று  படத்தின் முடிவு வரை பார்வையாளர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். எனவேதான் கடைசியில் வைக்கப்பட்டிருக்கும் ட்விஸ்ட்டும் அதற்குத் தரப்படும் விளக்கமும் நம்மை அதிரவைக்கின்றன.

பிறவியிலேயே குருடானவர்கள் கனவு ‘காண்’பார்களா? இந்தக் கேள்வி சில நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. நவீன அறிவியலின்படி, பிறவியில் கண்பார்வையற்றவர்களுக்கும் கனவுகள் வரும். ஆனால், கனவில் சத்தம், மணம், தொடுஉணர்ச்சி மட்டுமே இருக்கும். அவர்களுக்கு பார்வை என்பது என்னவென்றே தெரியாததால், மூளையால் கனவு காணும்போது பார்வை உணர்வை உருவாக்க முடியாது. ஆனால், ஏதேனும் விபத்தில் கண்பார்வை போனவர்கள் கனவில் தம்மால் பார்க்க முடிவதாக சொல்கிறார்கள். பார்வை பறிபோவதற்கு முன்பே மூளையில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளை வைத்துக்கொண்டு, பார்வை போன பின்பும் மூளையால் கனவுகளில் காட்சிகளை உருவாக்க முடிகிறது!

இந்தப் படத்திலும் நிஜக் கதையில், சினிமா பிரபலமான விக்னேஷ் சிறுவயதில் ஒரு விபத்தில் (விளக்கம்) கருப்பு வெள்ளை நிறக்குருடு (விளக்கம்) எனும் பாதிப்புக்கு உள்ளானவன். (நிறக்குருடு எனும் கருத்தும் தமிழ் சினிமாவுக்கு புதிதுதான்) ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் அவனால் நிறங்களைப் பார்க்க முடிந்திருக்கிறது. எனவே, அவனது நிஜவாழ்வு கருப்பு வெள்ளையாகவும், கனவுகள் நிறங்களாகவும் தோன்றுகின்றன!

நோலன் படங்களின் தாக்கம்

இவையெல்லாவற்றையும் விட, எனக்குள் ஒருவனில் (அதாவது லூசியாவில்) நோலனின் தாக்கம் நன்றாகத் தெரிகிறது. கருப்பு-வெள்ளை கலர் காட்சிகளை அடுத்தடுத்து பயன்படுத்துதல் (மெமெண்டோ), அட்டகாசமான ட்விஸ்ட் முடிவும் அதற்கான க்ளூக்களும் (ப்ரெஸ்டீஜ்), கனவு-நிஜ விளையாட்டு (இன்செப்ஷன்), தூக்கமின்மை அவதி (இன்சோம்னியா) என நோலனின் நான்கு படங்களின் பாதிப்பு இதில் இருப்பது தெரிகிறது. இருந்தும் இதெல்லாம் காப்பி என்று சொல்ல முடியாது. லூசியாவின் இயக்குனர் பவன் குமார் நோலனின் தீவிர ரசிகராக இருக்கக்கூடும். நானும் தீவிர நோலன் ரசிகன் என்பதால் நன்றாக ரசிக்க முடிந்தது. J


திரைக்கதையின் நேர்த்தியையும், Lucid Dreaming எனும் புத்தம்புது எண்ணக்கருவையும்விட, பிரபலங்கள் சொந்த வாழ்வில் எதிர்கொள்ளும் அவலங்கள், அவர்களின் ஆசைகள் போன்றவையும் காட்டப்பட்டிருக்கின்றன. இரு கதைகளிலும் இருவேறு உடல்மொழியுடன் நடிக்கும் சித்தார்த்தின் நடிப்பும் படத்துக்கு ஒரு பெரிய பலம். சமீப காலமாக, அவர் காதலில் சொதப்புவது எப்படி?, ஜிகிர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் என நல்ல, வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதும் பாராட்டத்தக்கது.


இத்தனை சிறப்பான, கன்னடத்தில் வெற்றி பெற்ற படம், தமிழில் தோல்வியடைந்ததற்கு காரணம் போதிய விளம்பரம் செய்யாததுதான் என நினைக்கிறேன். தொலைக்காட்சியில் தேவையான அளவு விளம்பரங்கள் ஒளிபரப்பாதது மக்கள் மத்தியில் படம் எடுபடாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம். வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும், புதுமையான கருவை தைரியமாக எடுத்துக்கொண்டது மட்டுமன்றி அதை அருமையான படமாகவும் வெளியிட்ட கன்னட மற்றும் தமிழ்க் குழுவினருக்கு வாழ்த்துக்கள். 

எனக்குள் ஒருவன் – அறிமுக விமர்சனம்

Disclaimer: இந்தப் பதிவு படம் பார்க்கப் போகிறவர்களுக்கான அறிமுகம் மட்டுமே. எனவே, ஸ்பாய்லர்கள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். படம் பார்த்தவர்கள், இதையும் படித்துவிட்டு, ஸ்பாய்லர்களுடன் கூடிய ஒரு விரிவான அலசல் (Analysis) பதிவை இங்கே படிக்கலாம்.

படம் பார்த்து முடிந்தாலும் சில நாட்களுக்கு சிந்திக்க வைக்கும் தரமான brain-teasing படங்கள் ஹாலிவுட்டில் வெளிவருவதே அரிது.  இந்திய மொழிகளில் அரிதினும் அரிது. அப்படி ஒரு தரமான படமாக, கன்னட லூசியாவை இறக்குமதி செய்து, கனவு-நிஜம் என நோலனின் ஸ்டைலில் பார்வையாளரின் மூளைக்குள் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்.

கதைக்கரு

கதையின் நாயகன் விக்னேஷ் (சித்தார்த்) ஒரு சாதாரணன். He is nobody. தியேட்டரில் டார்ச் அடிக்கும் தொழிலாளி. படிப்பு, பணம், வீரம், அழகு, புகழ், புத்திசாலித்தனம் என எதுவுமே இல்லாத ஒருவன். அவனுக்கு இருப்பது ஒன்றே ஒன்றுதான். இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மைக் குறைபாடு. இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவனுக்கு லூசியா எனப்படும் தூக்கம்+கனவு மாத்திரை கிடைக்கிறது.

அதைப் போட்டுக்கொண்டதும் நன்றாகத் தூக்கம் வரும். அதோடு கனவும் வரும். கனவு என்றால், நாம் காணும் சாதா கனவுகள் இல்லை. ஸ்பெஷல் கனவு. உண்மை போலவே இருக்கும், நம்மால் சுயமாக இயங்கக்கூடிய, நாமே உருவாக்கக்கூடிய ஒரு கனவு. அதுமட்டுமல்ல. இந்தக் கனவு தொடர்ச்சியானது. ஒவ்வொரு நாள் இரவிலும், இந்தக் கனவின் தொடர்ச்சியைக் காணலாம். அதாவது, விழித்திருக்கும்போது ஒரு வாழ்க்கை, தூங்கும்போது வேறொரு வாழ்க்கை என இரண்டு வாழ்க்கைகளை வாழலாம்!

கதையின் அறிமுகம்

வெறும்பயலான விக்னேஷ், ஒவ்வொரு இரவிலும் மருந்தைப் போட்டுக்கொண்டு தான் ஒரு பெரிய நடிகனின் வாழ்க்கையை வாழ்வதாக கனவு காண்கிறான். படத்தில் கனவுக் காட்சிகளும், நிஜக் காட்சிகளும் கலர் மற்றும் கருப்பு வெள்ளையில் அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. கலர்க் காட்சிகளில் அழகற்ற வெகுளியான விக்னேஷ், ஒரு பீட்சாக் கடையில் வேலை செய்யும் அழகிய பெண்ணைக்கண்டு காதலில் விழுகிறான். அவள் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்லும்போது அவள் அவனை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறாள். அதேநேரம் கருப்பு வெள்ளையில் ஆணழகனான விக்னேஷும் நடிகையான அதே பெண்ணும் காதலிக்கிறார்கள். கலரில், இவன் வேலை செய்யும் தியேட்டர் முதலாளி வாங்கிய கடனுக்குப் பதிலாக தியேட்டரை விற்குமாறு ஒரு ரௌடிக் கும்பல் மிரட்டுகிறது. கருப்பு வெள்ளையில் பிரபலமான விக்னேஷுக்கு ஒருவன் அடிக்கடி தொடர்புகொண்டு பணம் தருமாறு மிரட்டுகிறான். இப்படியாக அவனது நிஜவாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் கனவில் பிரதிபலிக்கின்றன.

இந்த கனவு-நிஜம் காட்சிகள் மட்டுமல்லாமல், படத்தின் ஆரம்பத்தில் விக்னேஷ் தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கோமாவில் படுத்திருப்பதைக் காட்டுகிறார்கள் அது கொலையா, தற்கொலையா, விபத்தா என போலிஸ் நடத்தும் புலனாய்வு படத்தின் இடையிடையே காட்டப்பட்டு, முடிவில் முடிச்சு அவிழ்க்கப்படுகிறது. (விக்னேஷ் பிழைத்துவிடுகிறான். படம் சுபமாக முடிகிறது.)

இப்படியாக, மூன்று கதைகளையும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கொண்டுபோய் கடைசிக் காட்சிகளில் அருமையாகக் கோர்த்து முடிக்கும்போது அதிர்கிறோம். படத்தை மறுபடியும் பார்க்க எண்ணுகிறோம். இதுதான் இப்படத்தின் திரைக்கதையின் வெற்றி.

லூசியா (2013)


கன்னடத்தில், பவன் குமார் இயக்கத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற லூசியா (2013)வின் ரீமேக்தான் இது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்திய திரை வரலாற்றில், முதன்முறையாக தயாரிப்பாளர் இல்லாமல், Crowdfunding முறையில் வெளியான திரைப்படம் லூசியா. அதாவது, படத்தின் கதைச்சுருக்கத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, திரைப்படம் தயாரிக்க நன்கொடை வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். அப்படி மக்கள் வழங்கிய படத்தில் தயாரிக்கப்பட்ட படம்தான் லூசியா. அதன் இலாபத்தை தானமாக கொடுத்தார்களா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

சித்தார்த்

இரு கதைகளிலும் இருவேறு உடல்மொழியுடன் நடிக்கும் சித்தார்த்தின் நடிப்பும் படத்துக்கு ஒரு பெரிய பலம். சமீப காலமாக, அவர் காதலில் சொதப்புவது எப்படி?, ஜிகிர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் என நல்ல, வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதும் பாராட்டத்தக்கது.



Verdict

மொத்தத்தில், பார்வையாளரைக் கண்டபடி குழப்பாமல், தேவையான திருப்பங்கள் மற்றும் அசரவைக்கும் முடிவுடன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Nolan படங்கள், புத்திசாலித்தனமான துப்பறியும் நாவல்களை ரசிப்பவர்கள் கண்டு களிக்கலாம். கடைசிக் காட்சி வரை பாருங்கள், ஒரு அருமையான அனுபவத்துக்கு நான் கியாரண்டி.. :-)

My Rating: 10/10


(படம் பார்த்துவிட்டீர்கள் என்றால், அப்படியே படத்தின் அலசல் (Analysis) ஐயும் இங்கே படித்துவிடுங்கள்.)

Thursday 5 February 2015

Catch Me If You Can (2002) - திரை விமர்சனம்



1950 இல் அமெரிக்காவில், பதினேழு வயதான Frank Abagnale எனும் ஒரு பலே திருடன் உலவினான். செக் புத்தகங்களை மோசடி செய்தும், பைலட்டாக, டாக்டராக, வழக்கறிஞராக ஆள்மாறாட்டம் செய்தும், வேறு பல தகிடுதத்தங்கள் செய்து வங்கிகளிடமிருந்து ஏராளமான பணத்தினை புத்திசாலித்தனமாக கொள்ளையடித்துத் திரிந்த அந்தச் சிறுவனை, அமெரிக்க போலீசார் துப்புத் துலக்கி கைது செய்தும், அவன் இரண்டு தடவைகள் தப்பிவிட்டான். ஒருவழியாக சில வருடங்களில் அவனைப் பிடித்து சிறையில் போட்டார்கள். ஐந்து வருடங்கள் கழித்து, 'பாம்பின் கால் பாம்பறியும்' என பிற வங்கி மோசடிகளை துப்புத் துலக்குவதற்கு அவன் பொலிசாருக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். இன்று, 66 வயதான அவர், உலகின் தலைசிறந்த பாதுகாப்பு ஆலோசகராக, Abignale & Associates எனும் பாதுகாப்பு நிறுவனத்தின் ஸ்தாபகராக, போலீசாருக்கும் வங்கிகளுக்கும் பாடம் எடுக்கும் விரிவுரையாளராக, கோடீஸ்வரராக வாழ்ந்து வருகிறார்.


ப்ரான்க் அபிக்நேல்
(Frank Abignale)
ப்ரான்க் செய்த தகிடுதத்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல. புகழ்பெற்ற விமான நிறுவனமான Pan Am ஐச் சேர்ந்த பைலட்டாக நடித்து, இவர் தனது 16-18 வயதுக்குள், 26 நாடுகளுக்கு, பத்து லட்சம் மைல்களுக்கு மேல், 250 தடவை  deadhead முறையில் இலவசமாகப் பயணித்திருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு ஒரு பட்டத்தை பறக்கவிடக்கூட தெரியாது! அது மட்டுமன்றி PanAm வழங்கும் சம்பளச் காசோலைகளைப் போல போலிகளை தயாரித்து, பல்லாயிரம் டாலர்களைச் சுருட்டியதோடு, உலகம் முழுவதும், பல சொகுசு விடுதிகளில் PanAm நிறுவனத்தின் பெயரைச் சொல்லியே இலவசமாக தங்கியிருந்திருக்கிறார்! கொஞ்ச நாளில் இப்படி ஒருவர் உலவுகிறார் என பத்திரிகைகள் கூவத் தொடங்கியதும், Pan Am ஐ விட்டுவிட்டு, ஒரு மருத்துவராக நடிக்க ஆரம்பித்தார். உலகப் புகழ்பெற்ற Harvard பல்கலைக்கழகத்தின் போலி சான்றிதழ் ஒன்றை உருவாக்கி, ஒரு வைத்தியசாலையில், வைத்திய மேற்பார்வை டாக்டராக பணியில் சேர்ந்தார். மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாமல், திறமையான மேற்பார்வையாளராக நடித்துவந்தவர், தன்னால் பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என உணர்ந்ததும் அந்தப் பதவியிலிருந்து விலகினார். பிறகு, இன்னொரு பிரபலமான சட்டக்கல்லூரியின் சான்றிதழை போலியாக தயாரித்து, வெறும் எட்டு வாரங்கள் சட்டம் படித்து, அமெரிக்காவின் ஒரு கடினமான சட்டப் பரீட்சைக்கு தேர்ச்சிபெற்று ஒரு சட்டத்தரணியானார். இவ்வாறாக, போலி ஆவணங்களை தயாரித்து, அவற்றின் உதவியுடன் எட்டுக்கும் மேற்பட்ட தொழில்களில் வெவ்வேறு பெயர்களில்  ஈடுபட்டிருந்திருக்கிறார். (போலி ஆவணங்களை கச்சிதமாக தயாரிப்பதில் ப்ரான்க்குக்கு இருந்த நிகரற்ற நிபுணத்துவம், பிற்காலத்தில் அவர் FBIக்கு உதவும்போது போலி ஆவணங்களை கண்டுபிடிப்பதிலும், அவற்றை தயாரித்த பிற திருடர்களைப் பற்றி துப்புத் துலக்குவதிலும் பெருமளவு உதவியது.)


இப்படியாக, பிரான்ஸில் வைத்து கள்ளக் காசோலைகளை தயாரித்துக் கொண்டிருந்தவரை, FBI கையும் களவுமாக பிடித்தது. அவரை அமெரிக்காவுக்கு கொண்டுவந்த விமானம் தரையிறங்கிக் கொண்டிருக்கும்போது, ஓடும் விமானத்திலிருந்து குதித்து ஆள் தப்பி ஓடிவிட்டார். இன்னொருமுறை, இவரைப் பிடித்து சிறையில் அடைத்த போது, அங்கே சிறை கண்காணிப்பாளராக (Prison Inspector) நடித்து, சிறை அதிகாரிகள் கொடுத்த பலத்த உபசாரங்களையும் மரியாதையையும் ஏற்றுக்கொண்டு, சிறையிலிருந்து தப்பிவிட்டார்!!! இத்தனையும் இருபது வயதுக்குள்ளாக செய்திருக்கிறார் என்பதுதான் லாஜிக்கே இல்லாத ஒரு உண்மைக்கதைக்கு உதாரணம்.

ட்ரைலர் இங்கே:


இவருடைய வாழ்க்கை வரலாறு, மிக விரிவாக 'Catch Me If You Can' என்ற பெயரில் 1980ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது. இப்படி ஒரு கதை, அதுவும் உண்மைக் கதை கிடைப்பதென்பது ஹாலிவுட்டில் கோடி ரூபாய் லாட்டரி அடித்தது போன்ற அதிஷ்டம். DreamWorks நிறுவனத்துக்கு இப்படத்தின் உரிமைகள் விற்கப்பட, பல ஹாலிவுட் அரசியல்களைக் கடந்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்குனராக நியமிக்கப்பட்டார். டி கேப்ரியோ, டாம் ஹேங்க்ஸ் என இரண்டு ஸ்டார்களும் சேர்ந்துகொள்ளவே, படம் தயாராகி 2002ம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றி பெற்றது.


படத்தில், பதினேழு வயது புத்திசாலி திருடனாக டி கேப்ரியோவும், துப்புத் துலக்கும் FBI அதிகாரி Carl Hanratty (இவரும் உண்மைக் கதாபாத்திரம்)யாக டாம் ஹேங்க்ஸும் நடித்துள்ளனர்.  திரைக்கதை பாராட்டத்தக்க அளவுக்கு உண்மைக் கதையை நெருக்கமாக பின்பற்றிச்செல்கிறது. காட்சியமைப்புக்களிலும், திருடன் போலிஸ் விளையாட்டிலும் அதிவேகமாக பயணிக்கும் திரைக்கதை, நிஜத்தைக் கெடுக்காமல் திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு ஒரு உதாரணம். 66 வயதில், பாதுகாப்பு ஆலோசகராக வாழும் ப்ரான்க்கே இப்படத்தின் திரைக்கதையையும், உண்மைக்கதையில் ஸ்பீல்பெர்க் செய்த சிறு மாற்றங்களையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தை அல்லது கதையை லேசாகத் தழுவித்தான் தமிழில் பெருவெற்றி பெற்ற திரைப்படமான, கே.வி ஆனந்தின் 'அயன்' வெளிவந்தது. அயன் திரைப்படத்தையோ அல்லது இந்தத் திரைப்படத்தையோ பார்க்கும்போது 'என்னடா, லாஜிக்கே இல்லையே?' என உறுத்தும் உணர்வு, இது உண்மைக்கதை எனத் தெரியவரும்போது பிரமிப்பாக மாறுகிறது. Truth is stranger than fiction indeed!

இத்தனை சுவாரஸ்யமான, படுவேகமான படத்திற்குள், பெற்றோரின் விவாகரத்து ஒரு குழந்தையின் மனதை எப்படிப் பாதிக்கிறது எனும் சமூகக்கருத்தையும், தந்தை-மகன் இடையிலான பாசப்பிணைப்பையும் பொதிந்து வைத்திருக்கிறார் திரைக்கதை எழுத்தாளர் Nathanson. படத்தின் தீம் இசையும் ரசிக்கவைக்கிறது. திரை ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் இது.

My Rating: 9/10

Wednesday 28 January 2015

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் (புத்தக விமர்சனம்) - 2


The Dahmer
புத்தகம் முதலில் புகழ்பெற்ற(?!) சீரியல் கொலைகாரர்களைப்பற்றி பேசுகிறது. அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் வாழ்ந்து, பலரைக் கொடூரமாக சித்திரவதைப்படுத்தி கொலைசெய்து, அவர்களின் உடல் உறுப்புக்களை நினைவுச்சின்னங்களாக வைத்திருந்த, கொலையுண்டவர்களின் உடற் பாகங்களை உண்டு ருசித்த கொலைகாரர்களான தி டாமர், ஆண்ட்ரே சிக்காடிலோ, டேவிட் பெர்கொவிஸ் போன்றவர்களைப் பற்றி, அவர்களின் கொலை செய்யும் முறைகள், போலிஸ் அவர்களை கண்டுபிடித்த கதை, அவர்களின் குழந்தைப் பருவ பாதிப்புக்கள் என விரிவாக அலசப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சீரியல் கொலைகாரன் எப்படி உருவாகிறான் என்பதையும் அலசியிருக்கிறது. நம் குழந்தைகளை எப்படி நடத்தக்கூடாது என்பதை விரிவாகச் சொல்கிறது.



அத்துடன், வீட்டுக்கு வீடு காணப்படும், பொதுவாக நம்நாட்டில் அதிகம் காணப்படும் “குரூரமான கணவர்களை”ப் பற்றியும் இப்புத்தகம் பேசுகிறது. நம்நாட்டில், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்  என இருந்துவிடுவதால், இவ்விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. நம் கலாச்சாரத்தின் உளுத்துப் போன, ஆயிரம் காலத்து திருமண முறையும் இதற்கு பெரிதும் உதவுகிறது. மேலைநாட்டில், இப்படியான ஒரு மிருகத்துக்கு வாழ்க்கைப் பட்ட பெண்ணொருத்தி, கொடுமை தாங்க முடியாமல், வெளிவந்து கோர்ட்டில் சொன்ன விஷயங்களை என்னால் எழுத முடியவில்லை. புத்தகத்தில் வாசித்தால், “எப்படியாச்சும் என் பொண்ணை ஒரு இடத்துல கட்டிக் கொடுத்துட்டேன்னா, என் கடமை முடிஞ்சிடும்” என, வரதட்சிணையும் கொடுத்து, பெண்ணை ஒரு மிருகத்துக்கு கட்டிக்கொடுத்து சந்தோஷப்படும் நம்நாட்டுப் பெற்றோருக்கு கொஞ்சம் புத்தியில் உறைக்கலாம்.

புத்தகத்தின் அடுத்த பகுதி, கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகள் மற்றும் அவர்களது அடியாட்களின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறது. நம்மைப்போல நல்ல மனிதர்களாக, குடும்பத்தவர்களை அரவணைத்து வாழ்ந்த சில இந்துக்கள், கூட்டமாகக் கூடி பம்பாய்க் கலவரத்தில் கர்ப்பவதியான ஒரு முஸ்லிம் பெண்ணின் பிறப்புறுப்பில் கைவிட்டு, கருவை பிய்த்தெடுத்து தீவைத்து கொளுத்த எப்படி மனது வந்தது? நாஜிக்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகம் போவதுபோல புறப்பட்டுச் சென்று, நூற்றுக்கணக்கான யூதர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக் கொன்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து, மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இசை நிகழ்ச்சிகளுக்குப் போனது எப்படி? இதற்குக் காரணம் நாம்-அவர்கள் எனும் சமூகப் பாகுபாடுதான் என விரிவாக விளக்குகிறது.

இத்துடன், மக்களை ஏமாற்றும் பக்தி இயக்கங்கள் பற்றியும், அதன் சைக்காலஜியைப் பற்றியும் புத்தகம் விளக்குகிறது. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ எனும் மனநிலையில் மக்கள் சேரும் இவ்வித இயக்கங்களையும், அதில் சில இயக்கங்களில் நடந்த குரூரங்களையும் மதன் விபரிக்கிறார்.

அடுத்ததாக, பரிணாம மனோதத்துவவியலின் (evolutionary psychology) பார்வையில் மனிதனின் கொலை, திட்டமிட்ட கொலை, கற்பழிப்பு போன்றவற்றை ஒத்த நடத்தைகள் நம் உறவினரான சிம்பன்ஸிகளிடம் காணப்படுவதை விளக்குகிறது. கொலை ஏன் தடை செய்யப்பட்டது? திருமணம் ஏன் எல்லாச் சமூகங்களிலும் காணப்படுகிறது? என பல கேள்விகளுக்கு அறிவியல்ரீதியான பதில்கள் இங்கே கிடைக்கின்றன.
ஒரு விதத்தில் மிகச் சுயநலமான, மிக கில்லாடித்தனமான கண்டுபிடிப்பு – திருமணம்! சற்று யோசித்துப் பாருங்கள். உங்களோடு வாழ்ந்து, குழந்தைகள் பெற்றுத் தரக்கூடிய ஒரு பெண்ணை தனியாக விட்டு நீங்கள் நகர்ந்தாலே, நூற்றுக்கணக்கான ஆண்கள் அவளை தூக்கிச்செல்வதற்காக காத்திருகிறார்கள் என்றால் எப்படி இருக்கும்? அவர்களில் பலசாலியான ஒருவன் உங்களை அடித்துத்தள்ளிவிட்டு அவளை அபகரித்துக்கொண்டு போய்விடுவான் என்றால் அந்தப் பெண்ணைவிட்டு நீங்கள் அகல முடியுமா? மற்ற வேலைகள் எதையும் கவனிக்க முடியுமா?


அதாவது, இந்த முக்கியமான பிரச்னைக்கு தீர்வாக: “உன் பெண்ணை நான் தூக்க மாட்டேன். என் பெண்ணை நீ தூக்க கூடாது” என மனிதன் சமூகத்துடன் போட்டுக்கொண்ட ஒரு பரஸ்பர ஒப்பந்தம் (பார்க்க: Social Contract) தான் ஆயிரம் காலத்துப் பயிரான திருமணம் என்கிறார் மதன்.

கடைசியாக, ஜனநாயக முறையில் அதிபராக தெரிவுசெய்யப்பட்ட ஹிட்லரும், ஸ்டாலினும் எப்படி குரூரமான சர்வாதிகளாக மாறினார்கள் என்பதை, சமூகவியல், மனோதத்துவியல் காரணங்களைக் காட்டி, அவர்களது சிறுவயது அனுபவங்களையும் கூறி மதன் விளக்குகிறார். இன்று நாம் தெரிவுசெய்யும் எந்த ஒரு அரசியல்வாதியும், சரியான சட்டரீதியான கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் குரூரமானவராக ஆகலாம் என்பதை புத்தகம் விளக்குகிறது.


இப்படியாக, மனிதகுலத்தின் வன்முறை வரலாற்றின் ஒரு தெளிவான குறுக்குவெட்டுத் தோற்றமொன்றையும், மனிதனின் பரிணாம மனோதத்துவ வரலாற்றையும் சுவாரஸ்யமாக, 63 பக்கங்களுள் மதன் தந்திருக்கிறார். நான் படித்த மிகச் சிறந்த புத்தகங்களுக்குள் இதுவும் ஒன்று எனக் கூறலாம்.


புத்தகம் PDF வடிவிலும் கிடைக்கிறது. லிங்க் இங்கே: 

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் (புத்தக விமர்சனம்) -1


“எல்லா மனிதர்களுக்கும் இருண்ட பகுதிகள் உண்டு. அதற்குள்ளே புகுந்து பார்ப்பதை நாம் தவிர்த்தால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று அர்த்தம்” - மதன்




பதைபதைக்கவைக்கும் மனித வன்முறையின் உச்சங்களை, அறிவியல்ரீதியான கண்ணோட்டத்தில், துப்பறியும் நாவலைப்போன்ற சுவாரஸ்யமான எழுத்தில், மனோதத்துவவியல், சமூகவியல் பார்வைகளில் வெறும் 63 பக்கங்களில் மதன் அலசியிருக்கிறார். மதனைப் பற்றி தனியாக கூற வேண்டியதில்லை. புகழ்பெற்ற கார்டூனிஸ்ட், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்ட கலைஞர். சுவாரஸ்யம் மட்டும் இல்லாமல், இப்படியான விடயங்களில் சமூகத்தின் பார்வைகளை மாற்றக்கூடிய ஒரு நூலாகவும், படிப்பவர்களுக்கு சில முக்கிய கருத்துக்களைக் கூறும் நூலாகவும் இது வெளிவந்திருக்கிறது. மனோதத்துவம், அறிவியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமில்லாமல், அனைவருமே கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது எனக் கூறலாம். 


American Psycho (ஒரு சீரியல் கில்லரைப் பற்றிய படம்)
இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இதை வாசிப்பதற்கு, மனித வன்முறையின் எல்லைகளைத் தரிசிப்பதற்கு மிகவும் தயங்குவார்கள். படிப்பதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்க, இந்த மனிதத்தோல் போர்த்திய மிருகங்களைப்பற்றி ஏன் மெனக்கட்டு படிக்கவேண்டும் என்று கேட்பார்கள். உண்மையில், இந்தத் தொடர் மனநோயாளிகளைப் பற்றியதல்ல. சராசரி மனிதர்கள் எந்தளவுக்கு கொடூரமான வன்முறையாளர்களாக ஆக முடியும் என விளக்கும் தொடர் இது. இந்தப் புத்தகம் கூறும் செய்தி என்னவென்றால், இப்படிப்பட்ட குரூரமானவர்களுக்கும், நம்மைப் போன்ற பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி ஒரு நூலளவு மட்டும்தான். நம்மில் பலரும் கோபத்தின் உச்சியில், ஒருவித உந்துதலில் “இவனை கழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன?” என்று ஒருகணம் யோசித்திருப்போம், ஆனால், சமூக மற்றும் தனிமனித கட்டுப்பாடுகள் காரணமாக யோசிப்பதோடு மட்டுமே நின்றுவிடுகிறோம். இவர்கள், இன்னும் ஒருபடி மேலே போய், அதைச் செயற்படுத்துவதோடு, அதில் இன்பத்தை கண்டு, தொடர்ச்சியாக அவ்வாறு செய்கிறார்கள். ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.

Chikatilo-mugshot.jpgசிக்காடிலோ என்பவர் சமூகத்தில் மிகவும் மதிக்கப்பட்ட ரஷ்ய ஆசிரியர். கண்ணியமான உடை, சுமுகமாகப் பழகும் விதம், ரஷ்ய இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு என ஒரு அருமையான மனிதனாக அறியப்பட்டவர். இவர் பன்னிரண்டு வருஷங்களில் ஒன்றல்ல, இரண்டல்ல, ஐம்பத்து மூன்று பேரை கொலைசெய்தார் (அதுவும் எப்படி? உடலெங்கும் கத்தியால் குத்தி, கண்களைப் பிடுங்கியெடுத்து, பீறிடும் இரத்தத்தை குடித்து, இறந்தவரை கடித்துக் குதறி, அப்புறம் இன்னொன்றும் செய்தார்) என்பதை நம்ப முடியுமா? இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல. ஒரு அருமையான மனிதராக சமூகத்தில் வாழ்ந்தபடியே திட்டம்போட்டு குரூரமாக கொலைகள் செய்தார். இவரைப் போன்ற சீரியல் கொலைகாரர்களையும், சாதாரண மனிதர்களையும் கலந்து உட்கார வைத்துவிட்டு பேச்சுக்கொடுத்தால், மனோதத்துவ மாணவர்களாலேயே இரண்டு தரப்புக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!! அந்தளவுக்கு, நமக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.

அத்துடன், அதே சிக்காடிலோவின் சிறுவயது அனுபவங்களைப் பார்த்தால், அவர்மீது அனுதாபமே மிஞ்சும். அவருடைய சிறுவயதில், உக்ரேனில் கடும் பஞ்சம் நிலவிய நேரம். காட்டுப்பகுதியில் நடந்துவந்த அவனையும் அவன் அண்ணனையும் இடைமறித்த, பஞ்சத்தால் அடிபட்ட ஒரு கூட்டம், அவனது அண்ணனை கொன்று, உடலைத் துண்டாக்கி, தீயில் வறுத்தெடுத்து உண்டதை சிறுவனான சிக்காடிலோ முழுதும் பார்க்க நேர்ந்தது. தந்தை போர்க்கைதியானார். தாயின் அன்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. மனைவியும் அவனை மதிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய ஆண்மையும் பறிபோய்விட்டது. இதிலிருந்தெல்லாம் தப்பிக்க, ஒரு மாய உலகத்தை தனக்குள்ளேயே சிருஷ்டித்தான். மிகக் குரூரமான பாலியல் கற்பனைகளை வளர்த்துக்கொண்டான். பிறகு நடந்ததுதான் மேலே சொன்னது. 

இப்படிப்பட்ட கொலைகாரர்கள் எல்லாருமே காட்டுமிராண்டிக் கலாச்சாரம் கொண்ட மேலைத்தேய நாடுகளில் மட்டும்தான் இருக்கிறார்கள். தொன்மையான கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் எங்களிடம் இந்தப் பிரச்சனை எல்லாம் கிடையாது என்று மார்தட்டத் தேவையில்லை. சீரியல் கொலைகாரர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நம் நாடுகளிலும் இவர்கள் இருந்திருப்பார்கள். என்ன, நம் போலீஸுக்கு இவர்களைக் கண்டறிய திராணி இல்லை. அவ்வளவுதான். இதை மதனே புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

Tuesday 20 January 2015

The History of the World: Part-I (1981) திரை விமர்சனம்



Parody (நையாண்டி) என்பது ஒரு பிரபலமான இலக்கிய / திரைப்பட வகையாகும். இதுவரை வந்த தமிழ்ப்படங்களின் கிளிஷேக்களை பயங்கரமாக கிண்டலடித்த தமிழ்ப்படம் (2010), ஆங்கில பேய்ப்படங்களை கிண்டலடித்து வெளிவந்த Scary Movie படவரிசை, ஹிந்தி காதல் கதைகளை ஓரளவு பகடிக்குள்ளாக்கிய I Hate Luv Storys (2010), உலகமே பயந்து நடுங்கிய ஹிட்லரை அவரது காலத்திலேயே  நையாண்டி செய்து வெளிவந்த சார்லி சாப்ளினின் The Great Dictator (1940) எல்லாம் மிகுந்த புகழ் பெற்றவை. 

அந்த வகையில், மனித வரலாற்றின் பல பகுதிகளை கலைநயத்தோடு  நையாண்டி செய்து பெருவெற்றி பெற்ற படம்தான் Mel Brooks நடித்து இயக்கிய The History of the World: Part-I. இந்த Mel Brooks என்பவர் ஒரு நையாண்டி ஸ்பெஷலிஸ்ட். அறிவியல் புனைவுகள் முதல் கௌபாய் கதைகள் வரை பல வகைகளை கிண்டலடித்து படங்கள் இயக்கியிருக்கிறார். வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர்.


பதினைந்து கட்டளைகள்!
மனித இனம் உருவானது முதல், கற்கால நிகழ்ச்சிகள், பத்துக் கட்டளைகள் (Ten Commandments), ரோம சாம்ராஜ்ஜியத்தின் நடைமுறைகள், இயேசுவின் கடைசி விருந்து (Last Supper), யூதர்களை சித்திரவதைப்படுத்தி மதமாற்றம் செய்த Spanish Inquisition எனும் புனித இயக்கம், பிரஞ்சுப் புரட்சி எனும் வரலாற்றுப் பாடப்புத்தகத்தின் அத்தியாயங்களெல்லாம் பிரிக்கப்பட்டு வயிறு வலிக்கச் சிரிக்கும்படி நையாண்டி செய்யப்பட்டுள்ளன. 


படம் முழுவதும் பார்த்துப் பார்த்து செதுக்கிய வசனங்கள், பாடல்வரிகள் இருக்கின்றன. ஒரு சோறு பதமாக, இறுதி விருந்தில் இயேசு உரையாற்றும் நேரத்தில் உணவு விடுதியின் பணியாள் குறுக்கிடும்போது நடக்கும் சம்பாஷணை இதோ: 



வரலாற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்து சிரிக்க முடியும். படத்தின் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை முழுதும் ரசித்து சிரிக்கவேண்டுமானால், உரோம அரிச்சுவடி, இயேசுவுக்கு துரோகம் செய்தவனின் பெயர் என்ன, கிரேக்க புராணங்களில் வரும் ஒடீபஸ் (Oedipus) யார், Sammy Davis Jr. யார் என்பது போன்ற கொஞ்ச விஷயங்களும் ஆங்கில வட்டார வழக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் ஒடீபஸின் சோகக்கதையை,  போகிறபோக்கில் ஒரு பொதுவான ஆங்கில கெட்டவார்த்தையில் சொல்லிவிடுவது sheer genius. 

அத்துடன் படத்தின் பெயரில் Part I என இருந்தாலும், படம் பெருவெற்றி பெற்றாலும், படத்தின் இரண்டாம் பகுதி தயாரிக்கப்படவில்லை. காரணம், தலைப்பிலும் ஒரு பகடி இருக்கிறது. மனித வரலாற்றை எழுதுகிறேன் பேர்வழி என எழுத ஆரம்பித்து, முதல் பாகத்தை மட்டுமே வெளியிட்ட பிறகு, தலை வெட்டப்பட்டு இறந்த Sir Walter Raleigh இன் நினைவாகத்தான் The History of the World: Part-I என பெயர் வைக்கப்பட்டதாம். :-D
     


இப்படி தலைப்பில் ஆரம்பித்து, படம் முழுவதும் நையாண்டி காத்திருக்கிறது. இதற்கு மேலும் சொன்னால், சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். மிகவும் conservative ஆனவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய மத நம்பிக்கையாளர்கள், ஆங்கில கெட்டவார்த்தைகள் பிடிக்காதவர்கள் படத்தை பார்க்காமல் விடுவதே நல்லது. (படத்துக்கு Restricted ரேட்டிங் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்) மற்றவர்கள், குறிப்பாக வரலாறு தெரிந்தவர்கள் கட்டாயம் பார்த்துச் சிரிக்கவேண்டிய படம். 


My Rating: 9/10

Sunday 18 January 2015

பார்த்ததில் பிடித்த காணொளிகள் - 1

முடியைப் பிய்க்கவைக்கும் சூத்திரங்களும், கிரேக்க எழுத்துக்களும்  நிரம்பி எக்ஸாமில் வந்திருந்து வெக்டார் டென்சார் என டென்ஷனை ஏற்றும் அறிவியலை, எளிதாக சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வதில் அறிவியல் காணொளிகளுக்கு ஈடு இணை கிடையாது என அடித்துச் சொல்லலாம். அந்தவகையில் இவ்வாரம் பார்த்த வீடியோ தளங்கள், அதில் சுவாரஸ்யமான விடியோக்களின் தொகுப்பு இது.

VERITASIUM (The Element of Truth) 

எம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு அறிவியல் தரும் சிக்கலான பதில்கள் பாமரருக்கும் புரியும்படி மிகவும் சுவாரஸ்யமான, நூற்று எழுபது சிறுசிறு வீடியோக்களாக உருவாக்கி தனது யூடியூப் சானலில் பகிர்ந்திருக்கிறார் Derek Muller. இதோ அவரது ட்ரைலர்:


ஒளி (light) என்றால் என்ன என்று என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா? ஒளி வெறும் தண்ணீர் மாதிரித்தான் செயற்படுகிறது என்பதற்கு அசைக்கமுடியாத ஆதாரம் வழங்கிய, இயற்பியலின் பாதையை திசைதிருப்பிய ஒரு பரிசோதனையை (Young's double slit experiment) கடற்கரையில் வெறும் அட்டைப்பெட்டிக்குள் செய்துகாட்டி பொதுமக்களை வாயடைக்க வைக்கிறார். அந்தக் காணொளி கீழே



வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க (அது எவ்வளவு லாபகரமாக இருந்தாலும்) நாம் எந்தளவுக்கு தயங்குகிறோம்? சில ரிஸ்குகள் தொடர்ந்து தைரியமாக ஈடுபடும்போது  பெரும் லாபத்தை நிச்சயமாக வழங்குகிறன. முதல் ரிஸ்கையே எடுக்கத் தயங்கினால், தொடர்ந்து எப்படி ரிஸ்க் எடுக்கமுடியும்? Psychology, Strategy Theory, Sociology, Economics போன்ற துறைகளில் ஆராயப்படும் விஷயத்தை ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு பொதுமக்களிடமே இவர் செய்துகாட்டுகிறார். அந்தக் காணொளி கீழே


ஒரு எளிய, அருமையான சிந்தனை விளையாட்டின்  மூலம் அறிவியல் சிந்தனை எப்படி இயங்குகிறது என்பதை புரியவைக்கிறார். காணொளியைப் பார்ப்பவர்களும் இதை சுவாரஸ்யமாக விளையாடலாம். அந்தக் காணொளி கீழே...


"Does Quantum Entanglement defy Relativity?" என்பதில் ஆரம்பித்து, "Why everything is Random?" என்பதுவரை எக்கச்சக்கமான (171) வீடியோக்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் அருமையிலும் அருமை. எல்லாவற்றையும் இங்கே பார்க்கலாம்.

TedEd Videos

இவர்களைப்பற்றி உலகத்துக்கே தெரிந்திருந்தாலும் எனக்குத் தெரிந்ததென்னவோ இவ்வாரம்தான். இவர்கள் சிக்கலான அறிவியல் எண்ணக்கருக்களை சுவாரஸ்யமான அனிமேஷன்களாக செய்து தருகிறார்கள்.

மனித உடலிலேயே மிகவும் சிக்கலான உறுப்புக்களில் ஒன்றான கண், எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சியில் உருவாகியது என்பதை இங்கே விளக்குகிறார்கள். ஒளி தன்மேல் விழுவதை உணரக்கூடிய எளிய செல்கள் ஏன், எப்படி குழிவாகி, கண்ணாகி, ஒளிவில்லையுடன் கூடிய தற்போதைய தோற்றத்துக்கு வந்தன என சிறுபிள்ளைக்கும் புரியும் வகையில் விளக்குகிறார்கள். காணொளி கீழே



அப்பாவின் பேச்சை கேட்காமல் இயற்பியல் படிக்கப்போன ஒருவருக்கு படிப்பு முடிந்தும் வேலை கிடைக்கவில்லை. வாழ்க்கையில் தோல்வியடைந்து சாதாரண க்ளார்க் (எழுதுவினைஞர்) வேலையில் சேர்கிறார். திடீரென ஒரே வருடத்தில் (1905) நான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை மளமளவென்று எழுதி வெளியிடுகிறார். அவை சும்மா கட்டுரைகள் அல்ல. இயற்பியலின் அஸ்திவாரத்த்தை நான்கு மூலைகளில் வெடிவைத்துத் தகர்த்த, உலகம் பற்றிய அறிவியலின் புரிதலை நான்கு வெவ்வேறு தளங்களில் புரட்டிப்போட்ட புரட்சிக் கட்டுரைகள். ஒரு சாதாரண மேஜை கிளார்க் ஒரே வருடத்தில் இயற்பியலை புரட்டியது எப்படி? அது சாத்தியமா? அதனால்தான் 1905 ஆம் வருடத்தை Einstein's Miracle Year (Annus Mirabilis) என அழைக்கிறார்கள். (சொல்ல மறந்துவிட்டேன்.. அந்த மேஜை கிளார்க் தான் நம் ஐன்ஸ்டைன்.) :-)

நான்கில் ஒரு கட்டுரை (Brownian Motion) அணுக்களின் இருப்பை சந்தேகமின்றி உறுதிசெய்து Statistical Mechanics இலும் புரட்சி செய்தது. அடுத்த கட்டுரை (Photoelectric Effect) இருநூறு வருடங்களாக நம்பப்பட்ட "ஒளி ஒருவித அலை" என்பதை தகர்த்தெறிந்து 'ஒளி துகள்களாகவும் செயற்படுகிறது' என்றதோடு  பிற்காலத்தில் நோபல் பரிசையும் பெற்று, இன்றும் பல விஞ்ஞானிகளின் மொட்டைத்தலைக்கு காரணமாகும் குவாண்டம் அறிவியலையும் ஒருவகையில் தொடக்கிவைத்தது.  இன்னொரு கட்டுரை (Special Relativity) ஒளியின் வேகத்தை நெருங்கும்போது பல பைத்தியக்காரத்தனமான பௌதீக மாற்றங்கள் நடக்கும் என பயமுறுத்தியது. (அவையெல்லாம் உண்மையிலேயே நடக்கின்றன என பிறகு நிரூபணமானது) கடைசிக் கட்டுரை (Mass-Energy equivalence ) பொருட்கள் எல்லாமே வெறும் சக்தியால் ஆனவை என்றதுடன், சூரியனுக்குள்ளே என்ன நடக்கிறது, அணுகுண்டு உருவாக்குவது எப்படி என்பதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தது.

அவற்றைப்பற்றிய ஒரு தெளிவான சுவாரஸ்யமான அனிமேஷன் வீடியோ இதோ:


மற்ற காணொளிகள்

ஆப்பிள் எப்படி விழுகிறது? பூமி சூரியனை எப்படி சுற்றுகிறது? சந்திரன், பூமியைச் சுற்றிக்கொண்டே சூரியனை எப்படி சுற்றுகிறது? ஏன் பெரும்பாலான கிரகங்கள் ஒரே திசையில், ஒரே தளத்தில் சூரியனை வலம் வருகின்றன? சந்திரனுக்கு அனுப்பும் விண்கலத்தை எரிபொருள் இல்லாமலேயே பூமிக்கு கொண்டுவருவது எப்படி? இதையெல்லாம் கோலி உருண்டைகளை ரப்பர் ஷீட்டில் உருட்டி உருட்டியே இவர் செய்து காட்டுகிறார். பார்த்து வாயடைப்போம் வாருங்கள். அந்தக் காணொளி கீழே.



அதே ஐன்ஸ்டனின் அடுத்த தியரி (General Theory of Relativity - பொதுச்சார்புக் கொள்கை)  இயற்பியலை மட்டுமன்றி பிரபஞ்சத்தையே புரட்டிப் போட்டது என்றால் அது மிகையில்லை. வெளியும் காலமும் ஒண்ணு, அது தெரியாதவங்க வாயில மண்ணு என்று சொல்லிவிட்டு, நிறையுள்ள பொருட்கள் இந்த காலவெளியை வளைக்கின்றன, ஈர்ப்பு விசை என்பதே இந்த வளைவால் உருவாகும் ஒரு மாயைதான் என்றெல்லாம் தலைவர் சொன்னார். அன்றுமுதல் இன்றுவரை நூறு வருடங்களாக லேபிலிருந்து விண்வெளி வரை எங்கெங்கோ செய்யப்பட்ட ஆயிரக்காணக்கான பரிசோதனைகளில் ஒன்றில்கூட இது தோல்வியடையவில்லை! தெலுங்குப்பட  ஹீரோவைப்போல ஒத்தையாக நின்று இன்றுவரை அடித்து ஆடிக்கொண்டிருக்கும் அந்தக் கொள்கையை, ஒருவர் வெறும் ரப்பர் ஷீட்டை வைத்து விளக்குகிறார்!



அறிவியலை ரசிப்போம்...

DISCLAIMER

மேலே சொன்னதுல உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா அவசரப்பட்டு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவிடவேண்டாம். பின்னூட்டப்பெட்டிக்கு வாங்க, பேசலாம். எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.