Disclaimer: இப்பதிவில் ஸ்பாய்லர்கள் நிறைந்திருக்கின்றன. படம் பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும். இன்னும் படம் பார்க்காதவர்கள் இதைப் படித்தால் ஒரு அருமையான அனுபவத்தை இழப்பீர்கள். எனவே ஸ்பாய்லர்கள் அற்ற அறிமுக விமர்சனத்தை இங்கே படிக்கவும்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு உண்மையான brainteaser ஒரு நல்ல துப்பறியும் நாவல் போல, நல்ல மேஜிக் ட்ரிக் போல இருக்கவேண்டும். கதையை சும்மா அங்கும் இங்கும் கொண்டுபோய்விட்டு, கடைசியில் “நாங்க சொன்னதெல்லாம் டூப்பு... ஏமாந்தியா???” என்பதாக இருக்கக்கூடாது. மாறாக, படத்தின் முடிவுக்கான க்ளூக்கள் படம் முழுவதும் வைத்திருக்கப்பட வேண்டும். Hidden in plain sight! அதுவும், பார்வையாளன் முதல்முறை பார்க்கும்போது கண்டுபிடிக்கப்பட முடியாத வண்ணம் அவை இருக்கவேண்டும். படத்தின் இறுதிக் காட்சியைப் பார்த்ததும் பேயறைந்தது போல உட்கார்ந்திருக்கும் பார்வையாளனுக்கு அந்தக் க்ளூக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து அடுத்த சில நாட்களுக்கு அவனை அலைக்கழிக்கவேண்டும். படத்தை இரண்டாம் முறை பார்க்கும்போது, முற்றிலும் வேறுவிதமான கோணத்திலிருந்து, வேறொரு புதிய படத்தைப் பார்க்கும் உணர்வு வரவேண்டும். நோலனின் Prestige இந்த உணர்வுகள் அனைத்தையும் தரவல்லது. எனக்குள் ஒருவனும் இதே உணர்வுகளை தருவதாலேயே இதை ஒரு சிறந்த திரைக்கதை என்று கருதுகிறேன்.
முடிவுக்கான க்ளூக்கள்
படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல சிறு லாஜிக் மீறல்களை நாம் ஓரக்கண்ணால் கவனித்து
வருகிறோம். பரம ஏழையான தியேட்டர் விக்னேஷிடம் எப்படி அரிய லூசியா மருந்தை
வாங்குவதற்கு பணம் கிடைக்கிறது? லூசியாவை விற்பவர் உட்கார்ந்திருக்கும் அறையும்
அவரது பாவங்களும் ஆங்கிலப் படங்கள் போல மிகச் செயற்கையாக இருக்கிறனவே? அவ்வளவு
அழகான பெண் எப்படி இவனைப் போய் காதலிக்கிறாள்? ஒரே ஒரு வாரம் மட்டுமே இவனுடன் பழகிய
ஐரோப்பியப் பெண்கள், அவ்வளவு பெரிய பண உதவி செய்து இவனது தியேட்டரை புதுமைப்படுத்த
காரணம் என்ன?
இதைவிட பெரிய கேள்விகள் இரண்டு இருக்கின்றன.
- ஒன்றுமே தெரியாத வெகுளியான விக்னேஷ், அவ்வளவு சிக்கலான பிரச்சனைகள் நிறைந்த ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை எப்படி தத்ரூபமான கனவாகக் காண்கிறான்?
- கனவுகள் கருப்பு வெள்ளையில் வருகின்றன என்பது காலம் கடந்த ஒரு நம்பிக்கை. நம்மில் பெரும்பாலானோர் கலரில் தான் கனவு காண்கிறோம் என அறிவியலில் உறுதிப்படுத்திவிட்டார்கள். இருந்தும், கனவுக் காட்சிகளை ஏன் கருப்பு வெள்ளையில் காட்டுகிறார்கள்?
இப்படியான கேள்விகள் படம் பார்க்கும்போது உதித்தாலும், கதையின்
வேகத்தால் அவற்றை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தமிழ் சினிமாவில் லாஜிக்
மீறல்கள் சகஜம்தானே எனும் உணர்வு இதையெல்லாம் தாண்டச் செய்கிறது.
இருந்தும், இதெல்லாம் லாஜிக் மீறல்களே இல்லை, மாறாக படத்தின் முடிவில் வரும் அட்டகாசமான ட்விஸ்டுக்கு இந்தக்
கேள்விகள்தான் க்ளூவாக வருகின்றன என்பது புரியும்போது, இவ்வளவு திறமையாக நம்மை
ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது தெரியும்போது வரும் உணர்வுக்காகத்தான் இந்த
மாதிரிப் படங்களை நாம் பார்க்கிறோம்.
கறுப்பு வெள்ளை & கலர்

பிறவியிலேயே குருடானவர்கள் கனவு ‘காண்’பார்களா? இந்தக் கேள்வி சில
நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. நவீன அறிவியலின்படி, பிறவியில்
கண்பார்வையற்றவர்களுக்கும் கனவுகள் வரும். ஆனால், கனவில் சத்தம், மணம்,
தொடுஉணர்ச்சி மட்டுமே இருக்கும். அவர்களுக்கு பார்வை என்பது என்னவென்றே
தெரியாததால், மூளையால் கனவு காணும்போது பார்வை உணர்வை உருவாக்க முடியாது. ஆனால்,
ஏதேனும் விபத்தில் கண்பார்வை போனவர்கள் கனவில் தம்மால் பார்க்க முடிவதாக
சொல்கிறார்கள். பார்வை பறிபோவதற்கு முன்பே மூளையில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளை
வைத்துக்கொண்டு, பார்வை போன பின்பும் மூளையால் கனவுகளில் காட்சிகளை உருவாக்க
முடிகிறது!
இந்தப் படத்திலும் நிஜக் கதையில், சினிமா பிரபலமான விக்னேஷ் சிறுவயதில் ஒரு
விபத்தில் (விளக்கம்) கருப்பு வெள்ளை நிறக்குருடு (விளக்கம்) எனும் பாதிப்புக்கு உள்ளானவன். (நிறக்குருடு எனும் கருத்தும் தமிழ் சினிமாவுக்கு
புதிதுதான்) ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் அவனால் நிறங்களைப் பார்க்க
முடிந்திருக்கிறது. எனவே, அவனது நிஜவாழ்வு கருப்பு வெள்ளையாகவும், கனவுகள்
நிறங்களாகவும் தோன்றுகின்றன!
நோலன் படங்களின் தாக்கம்

திரைக்கதையின் நேர்த்தியையும், Lucid Dreaming எனும் புத்தம்புது
எண்ணக்கருவையும்விட, பிரபலங்கள் சொந்த வாழ்வில் எதிர்கொள்ளும் அவலங்கள், அவர்களின்
ஆசைகள் போன்றவையும் காட்டப்பட்டிருக்கின்றன. இரு கதைகளிலும் இருவேறு உடல்மொழியுடன்
நடிக்கும் சித்தார்த்தின் நடிப்பும் படத்துக்கு ஒரு பெரிய பலம். சமீப காலமாக, அவர்
காதலில் சொதப்புவது எப்படி?, ஜிகிர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் என நல்ல,
வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதும்
பாராட்டத்தக்கது.
இத்தனை சிறப்பான, கன்னடத்தில் வெற்றி பெற்ற படம், தமிழில் தோல்வியடைந்ததற்கு
காரணம் போதிய விளம்பரம் செய்யாததுதான் என நினைக்கிறேன். தொலைக்காட்சியில் தேவையான
அளவு விளம்பரங்கள் ஒளிபரப்பாதது மக்கள் மத்தியில் படம் எடுபடாமல் போனதற்கு காரணமாக
இருக்கலாம். வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும், புதுமையான கருவை தைரியமாக எடுத்துக்கொண்டது மட்டுமன்றி அதை அருமையான படமாகவும் வெளியிட்ட கன்னட மற்றும் தமிழ்க் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment