Thursday, 5 February 2015

Catch Me If You Can (2002) - திரை விமர்சனம்



1950 இல் அமெரிக்காவில், பதினேழு வயதான Frank Abagnale எனும் ஒரு பலே திருடன் உலவினான். செக் புத்தகங்களை மோசடி செய்தும், பைலட்டாக, டாக்டராக, வழக்கறிஞராக ஆள்மாறாட்டம் செய்தும், வேறு பல தகிடுதத்தங்கள் செய்து வங்கிகளிடமிருந்து ஏராளமான பணத்தினை புத்திசாலித்தனமாக கொள்ளையடித்துத் திரிந்த அந்தச் சிறுவனை, அமெரிக்க போலீசார் துப்புத் துலக்கி கைது செய்தும், அவன் இரண்டு தடவைகள் தப்பிவிட்டான். ஒருவழியாக சில வருடங்களில் அவனைப் பிடித்து சிறையில் போட்டார்கள். ஐந்து வருடங்கள் கழித்து, 'பாம்பின் கால் பாம்பறியும்' என பிற வங்கி மோசடிகளை துப்புத் துலக்குவதற்கு அவன் பொலிசாருக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். இன்று, 66 வயதான அவர், உலகின் தலைசிறந்த பாதுகாப்பு ஆலோசகராக, Abignale & Associates எனும் பாதுகாப்பு நிறுவனத்தின் ஸ்தாபகராக, போலீசாருக்கும் வங்கிகளுக்கும் பாடம் எடுக்கும் விரிவுரையாளராக, கோடீஸ்வரராக வாழ்ந்து வருகிறார்.


ப்ரான்க் அபிக்நேல்
(Frank Abignale)
ப்ரான்க் செய்த தகிடுதத்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல. புகழ்பெற்ற விமான நிறுவனமான Pan Am ஐச் சேர்ந்த பைலட்டாக நடித்து, இவர் தனது 16-18 வயதுக்குள், 26 நாடுகளுக்கு, பத்து லட்சம் மைல்களுக்கு மேல், 250 தடவை  deadhead முறையில் இலவசமாகப் பயணித்திருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு ஒரு பட்டத்தை பறக்கவிடக்கூட தெரியாது! அது மட்டுமன்றி PanAm வழங்கும் சம்பளச் காசோலைகளைப் போல போலிகளை தயாரித்து, பல்லாயிரம் டாலர்களைச் சுருட்டியதோடு, உலகம் முழுவதும், பல சொகுசு விடுதிகளில் PanAm நிறுவனத்தின் பெயரைச் சொல்லியே இலவசமாக தங்கியிருந்திருக்கிறார்! கொஞ்ச நாளில் இப்படி ஒருவர் உலவுகிறார் என பத்திரிகைகள் கூவத் தொடங்கியதும், Pan Am ஐ விட்டுவிட்டு, ஒரு மருத்துவராக நடிக்க ஆரம்பித்தார். உலகப் புகழ்பெற்ற Harvard பல்கலைக்கழகத்தின் போலி சான்றிதழ் ஒன்றை உருவாக்கி, ஒரு வைத்தியசாலையில், வைத்திய மேற்பார்வை டாக்டராக பணியில் சேர்ந்தார். மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாமல், திறமையான மேற்பார்வையாளராக நடித்துவந்தவர், தன்னால் பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என உணர்ந்ததும் அந்தப் பதவியிலிருந்து விலகினார். பிறகு, இன்னொரு பிரபலமான சட்டக்கல்லூரியின் சான்றிதழை போலியாக தயாரித்து, வெறும் எட்டு வாரங்கள் சட்டம் படித்து, அமெரிக்காவின் ஒரு கடினமான சட்டப் பரீட்சைக்கு தேர்ச்சிபெற்று ஒரு சட்டத்தரணியானார். இவ்வாறாக, போலி ஆவணங்களை தயாரித்து, அவற்றின் உதவியுடன் எட்டுக்கும் மேற்பட்ட தொழில்களில் வெவ்வேறு பெயர்களில்  ஈடுபட்டிருந்திருக்கிறார். (போலி ஆவணங்களை கச்சிதமாக தயாரிப்பதில் ப்ரான்க்குக்கு இருந்த நிகரற்ற நிபுணத்துவம், பிற்காலத்தில் அவர் FBIக்கு உதவும்போது போலி ஆவணங்களை கண்டுபிடிப்பதிலும், அவற்றை தயாரித்த பிற திருடர்களைப் பற்றி துப்புத் துலக்குவதிலும் பெருமளவு உதவியது.)


இப்படியாக, பிரான்ஸில் வைத்து கள்ளக் காசோலைகளை தயாரித்துக் கொண்டிருந்தவரை, FBI கையும் களவுமாக பிடித்தது. அவரை அமெரிக்காவுக்கு கொண்டுவந்த விமானம் தரையிறங்கிக் கொண்டிருக்கும்போது, ஓடும் விமானத்திலிருந்து குதித்து ஆள் தப்பி ஓடிவிட்டார். இன்னொருமுறை, இவரைப் பிடித்து சிறையில் அடைத்த போது, அங்கே சிறை கண்காணிப்பாளராக (Prison Inspector) நடித்து, சிறை அதிகாரிகள் கொடுத்த பலத்த உபசாரங்களையும் மரியாதையையும் ஏற்றுக்கொண்டு, சிறையிலிருந்து தப்பிவிட்டார்!!! இத்தனையும் இருபது வயதுக்குள்ளாக செய்திருக்கிறார் என்பதுதான் லாஜிக்கே இல்லாத ஒரு உண்மைக்கதைக்கு உதாரணம்.

ட்ரைலர் இங்கே:


இவருடைய வாழ்க்கை வரலாறு, மிக விரிவாக 'Catch Me If You Can' என்ற பெயரில் 1980ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது. இப்படி ஒரு கதை, அதுவும் உண்மைக் கதை கிடைப்பதென்பது ஹாலிவுட்டில் கோடி ரூபாய் லாட்டரி அடித்தது போன்ற அதிஷ்டம். DreamWorks நிறுவனத்துக்கு இப்படத்தின் உரிமைகள் விற்கப்பட, பல ஹாலிவுட் அரசியல்களைக் கடந்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்குனராக நியமிக்கப்பட்டார். டி கேப்ரியோ, டாம் ஹேங்க்ஸ் என இரண்டு ஸ்டார்களும் சேர்ந்துகொள்ளவே, படம் தயாராகி 2002ம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றி பெற்றது.


படத்தில், பதினேழு வயது புத்திசாலி திருடனாக டி கேப்ரியோவும், துப்புத் துலக்கும் FBI அதிகாரி Carl Hanratty (இவரும் உண்மைக் கதாபாத்திரம்)யாக டாம் ஹேங்க்ஸும் நடித்துள்ளனர்.  திரைக்கதை பாராட்டத்தக்க அளவுக்கு உண்மைக் கதையை நெருக்கமாக பின்பற்றிச்செல்கிறது. காட்சியமைப்புக்களிலும், திருடன் போலிஸ் விளையாட்டிலும் அதிவேகமாக பயணிக்கும் திரைக்கதை, நிஜத்தைக் கெடுக்காமல் திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு ஒரு உதாரணம். 66 வயதில், பாதுகாப்பு ஆலோசகராக வாழும் ப்ரான்க்கே இப்படத்தின் திரைக்கதையையும், உண்மைக்கதையில் ஸ்பீல்பெர்க் செய்த சிறு மாற்றங்களையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தை அல்லது கதையை லேசாகத் தழுவித்தான் தமிழில் பெருவெற்றி பெற்ற திரைப்படமான, கே.வி ஆனந்தின் 'அயன்' வெளிவந்தது. அயன் திரைப்படத்தையோ அல்லது இந்தத் திரைப்படத்தையோ பார்க்கும்போது 'என்னடா, லாஜிக்கே இல்லையே?' என உறுத்தும் உணர்வு, இது உண்மைக்கதை எனத் தெரியவரும்போது பிரமிப்பாக மாறுகிறது. Truth is stranger than fiction indeed!

இத்தனை சுவாரஸ்யமான, படுவேகமான படத்திற்குள், பெற்றோரின் விவாகரத்து ஒரு குழந்தையின் மனதை எப்படிப் பாதிக்கிறது எனும் சமூகக்கருத்தையும், தந்தை-மகன் இடையிலான பாசப்பிணைப்பையும் பொதிந்து வைத்திருக்கிறார் திரைக்கதை எழுத்தாளர் Nathanson. படத்தின் தீம் இசையும் ரசிக்கவைக்கிறது. திரை ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் இது.

My Rating: 9/10

No comments:

Post a Comment

DISCLAIMER

மேலே சொன்னதுல உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா அவசரப்பட்டு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவிடவேண்டாம். பின்னூட்டப்பெட்டிக்கு வாங்க, பேசலாம். எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.