Monday, 12 January 2015

மகாபாரதம் புனிதமானதா?


முன்குறிப்பு:

மிகவும் தொன்மையான, மகாபாரதத்தின் புனிதத்தன்மைக்கு எதிரான கருத்துக்களை இப்பதிவில் முன்வைத்திருப்பதைக் கண்டு பலரும் எரிச்சல் அடையலாம். எனக்கு மகாபாரதத்தின் மீதோ, ஆரியர்கள் / பிராமணர்கள் மீதோ எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துவிட்டு எல்லாரும் திடீரென மகாபாரதத்தை பாராட்டத் தொடங்கிவிட்டதால், பெரும்பாலானவர்கள் கவனிக்கத்தவறும் அதன் முரண்பாடுகளைப் பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்.

உண்மையில், உலகின் மிக நீண்ட கவிதையாக கருதப்படும் மகாபாரதத்தின் மீது, எனக்குப் பாரிய மதிப்பும் விருப்பமும் உண்டு. ஹோமரின் கிரேக்கக் காவியங்களான இலியட், ஒடிசியைப் போன்று ஒப்பற்ற தொன்மையும், இலக்கியச்செறிவும், அபாரமான கதையமைப்பும் கொண்டது மகாபாரதம் என்பதை அறிந்துள்ளேன். எட்டு, ஒன்பது வயதில் முதன்முதலில் மகாபாரதத்தின் சுருக்கம் படித்ததிலிருந்து அதன் கற்பனையின் ஆழமும், போர்களை, சூழ்ச்சிகளை விபரிக்கும் பாங்கும் என்னைக் கவர்ந்திருந்தன. சிறுவயதில், என்னை அர்ஜுனனாக கற்பனை செய்துகொண்டு மகிழும் அளவுக்கு மகாபாரதம் என்னை அன்றும், இன்றும் வசீகரித்திருக்கிறது.

இருந்தாலும், சிறந்த காவியமான மகாபாரதம் உண்மையில் புனிதமானதா? வேதகால அரசர்களின் க்ஷத்திரிய தர்மங்களை மட்டுமே பேசும் மகாபாரதம் கூறும் தர்மங்களுக்குள்ளேயே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி,  "குரு" நாட்டில், இரு அரச வம்சங்களுக்குள் உள்ள ஈகோ பிரச்சனையை தீர்ப்பதற்காக பல்லாயிரம் பேரைப் பலியெடுத்த யுத்தம்தான் குருஷேத்திர யுத்தம் எனும் வரலாற்றின்  பின்னணியில், என் சிற்றறிவுக்கு உட்பட்டவரை இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறேன். அதாவது, என்னை வசீகரித்த, சிறந்த காவியமான மகாபாரதத்தை ஒரு புனிதமான நூலின் ஸ்தானத்துக்கு ஏன்  உயர்த்தக் கூடாது என்பதற்கான காரணங்களை இங்கே எழுதியிருக்கிறேன். இனி பதிவுக்குள் போகலாம்...




கடந்த சில மாதங்களாக விஜய் டிவியிலும் சன் டிவியிலும் பலத்த விளம்பரத்தோடு, பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட மகாபாரதம் வெளியாகி வருவது நம் தங்க்லீஷ் கூறும் நல்லுலகம் முழுதும் அறிந்ததுதான். 'அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டும் போர்' என விளம்பரப்படுத்தப்பட்ட குருஷேத்திரப் போரின் இறுதிக்காட்சிகளில் எல்லாரும் "ஏஏஏஏய்ய்ய்ய்" எனக் கத்திக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பாய்கின்ற, இரத்தம் தெறிக்கும் காட்சிகளை பத்து வயதுப் பிள்ளையிலிருந்து, எண்பது வயதுப் பாட்டிவரை அனைவரும் ஏதோ உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியை பார்த்து கைதட்டுவதைப்போல, சொந்த வேலைகளை விட்டுவிட்டு ஆர்வத்தோடு பார்த்து ரசித்ததை, என் வீட்டிலேயே பார்க்கமுடிந்தது.

இதையெல்லாம் பார்த்தவர்கள் சும்மா இருந்தாலும் பரவாயில்லை. கௌரவர்களை வில்லாதி வில்லன்களாகவும் பாண்டவர்களும் கர்ணனும் நல்லவருள் நல்லவர்களாகவும், குருஷேத்திர யுத்தத்தை தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியாகவும் நம்பிக்கொண்டு பண்ணும் அலப்பறையைத்தான் தாங்க முடியவில்லை. மகாபாரதம் எனும் தொலைக்காட்சித் தொடரில் உள்ள குறைகளை இன்னொரு நாளைக்கு வைத்துக்கொண்டு, மகாபாரக் கதை உண்மையிலேயே புனிதமானதாக கருதப்படவேண்டுமானால், அதில் இருக்கக்கூடாத சில முரண்பாடுகளை இங்கே பார்ப்போம்.

மகாபாரதத்தில் பொதுமக்களின் நிலை

முதலாவதாக, பாரதக்கதை என்பது க்ஷத்திரியர்களுக்குள் மட்டுமே நடக்கும் கதையாகும். அரசர்கள், அவர்களது மேல்தட்டு பிரச்சனைகளை (சுயம்வரம், கெளரவம், பொறாமை) தவிர, சாதாரண கீழ்தட்டு மக்களின் பிரச்சனைகளோ, அஸ்தினாபுரத்தின் சமூக, பொருளாதார நிலையோ மகாபாரதத்தில் சரியாகக் காட்டப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. கௌரவர்கள் அதர்மத்தையும் பாண்டவர்கள் தர்மத்தையும் பின்பற்றுகிறார்கள் எனச் சொல்லப்படும் போதெல்லாம், அங்கே (குடிமக்களுக்குப் பயனற்ற) க்ஷத்திரிய தர்மமே "தர்மம்" என பொதுப்பெயரில் அழைக்கப்படுகிறது.

கௌரவர்கள் அவர்களது நாட்டில் கொடுங்கோல் ஆட்சி செய்தார்களா என்பதைப் பற்றியோ, ஊழல், வன்முறை என்பன அவர்களது ஆட்சியில் தலைதூக்கியிருந்ததா எனவோ, அல்லது பாண்டவர்கள் ஆட்சிக்கு வந்தபின் மக்களுக்கு சுபிட்சமான வாழ்வை அளித்தார்களா எனும் கேள்விகளைப் பற்றியோ, தர்மத்தைப் போற்றும் மகாபாரதம் கவலைப்படுவதில்லை. பல்லாயிரம் (பல அக்ரோணி!) படைவீரர்களைக் கொன்றுகுவிப்பதன்மூலம் அரசர்களான தமக்கு இடையிலான ஈகோ பிரச்சினையை எப்படி தீர்த்துக்கொண்டார்கள் என்பதையே மகாபாரதம் விபரிப்பதாகக் கருதுகிறேன்.

தர்மம் எல்லாருக்கும் பொதுவானதா?

அடுத்ததாக, தர்ம-அதர்மம் பற்றிப் பேசும்போதெல்லாம் ஒரு விஷயத்தை பெரும்பாலானவர்கள் மறந்துவிடுகின்றனர். அதாவது, தர்மம், அதர்மம் என அழைக்கப்படுபவை எல்லாருக்கும் எங்கேயும் எப்போதும் பொதுவானவை அல்ல. அவை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, காலத்தாலும் இடத்தாலும் மாறக்கூடிய விதிமுறைகள்தான். இதற்கு மகாபாரதத்தில் இருந்தே உதாரணம் கூறினால், திரௌபதி ஐந்து கணவன்மார்களை மணந்ததும், அர்ஜுனன் பல மனைவியர் மற்றும் எண்ணற்ற  தொடர்புகள் வைத்திருந்ததும், சகாதேவன் தனது வளர்ப்புத் தந்தையின் சதையைத் தின்றதும் இன்றைய காலத்தில் நடந்திருந்தால், மிக அருவருப்புடன் நோக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சைவர்களும் சமணர்களும் ஒருவரையொருவர் கழுவில் ஏற்றி வேடிக்கை பார்த்ததும், கிறித்தவர்கள் மதம் மாற மறுத்த யூதர்களை சித்திரவதவதைப்படுத்திக் கொன்றதும் அன்றைய காலத்தில், அந்தந்த சமயத்தவருக்கு போற்றப்படக்கூடிய வீரச்செயலாக இருந்திருக்கலாம். ஆனால், தற்காலத்தில் அவற்றை தர்மம் என (சுயஅறிவு இருக்கும்) யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மகாபாரதத்தில் தர்ம முரண்பாடுகள்

சரி, பண்டைய காலத்தின் க்ஷத்திரிய தர்மத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மகாபாரதம் என்று வைத்துக்கொண்டாலும், அங்கும் பல முரண்கள் காணப்படுகின்றன. அரசகுல வழக்கத்தின்படி, வயதில் மூத்த இளவரசனுக்கே (அவன் எவ்வளவு பெரிய ரௌடியாக இருந்தாலும், தகுதியற்ற மூடனாக இருந்தாலும்) அரியணையில் உரிமை உண்டு. அண்ணன் விட்டுக் கொடுத்தால், தம்பி பெற்றுக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால், அஸ்தினாபுரத்து அரியணை, மூத்தவனான திருதராஷ்டிரனுக்கும், அவனது சந்ததியினருக்கும்தான் உரியது. இதற்கு விடையாக, "குருடனுக்கு நாடாளும் தகுதி இல்லை" என சிலர் வாதிடலாம். இந்த வாதத்துக்கு ஆதாரமாக வரலாற்றில் நடந்த வேறு நிகழ்ச்சிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அந்த வாதத்தைக் கூட ஏற்றுக்கொண்டு, ஒருவேளை பாண்டுவை அரசாள விட்டிருந்தால்கூட, பாண்டுவிற்குப் பின் ஆட்சி துரியோதனனுக்குத்தான் போயிருக்கும். எடுத்துக்காட்டாக, இடைக்கால சோழர்களின் வரலாற்றில், கண்டராதித்தருக்குப் பிறகு, அவரது மகனான உத்தமசோழனுக்கு (பிற்காலப்பெயர்) வயது போதாத காரணத்தால், கண்டராதித்தரின் தம்பியான அரிஞ்சயனின் மகன் சுந்தரசோழன் அரியணை ஏறினான். ஆனால், சுந்தரசோழனுக்குப் பிறகு அவருடைய மகன் இராஜராஜ சோழன் அரசகுல நெறிப்படி அரியணையை உத்தமசோழனுக்கு விட்டுத்தந்ததாக வரலாறு கூறுகிறது. சோழர்களுக்கு இராஜகுருவாக இருந்தவர்கள் வேதம் பயின்ற பிராமணர்கள் என்பதால், தமிழர்களின் க்ஷத்திரிய தர்மத்திற்கும், வேதகால ஆரியர்களின் க்ஷத்திரிய தர்மத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. எனவே, இதை வைத்துப் பார்க்கும்போதும் பாண்டவர்களுக்கு அரியணை உரிமை கிடையாது.

அதையும்கூட விட்டுவிட்டுவிட்டாலும், மறுதலிக்க முடியாத வாதம் என்னவென்றால், பாண்டவர்கள் பாண்டுவின் சொந்த மகன்கள் அல்ல. பாண்டுவின் மனைவியரான குந்தி, மாதுரிக்குக்கு வேறு பலரின் மூலம் பிறந்தவர்கள். அஸ்தினாபுரத்து அரச வம்சத்தில் (சந்திர குலத்தில்) பாண்டவர்கள் பிறக்கவில்லை. அஸ்தினாபுரத்து அரசர்களுக்கு எவ்வித இரத்த சம்பந்தமும் இல்லாதவர்களுக்கு அரியணையை அளிக்கும்படி எந்த க்ஷத்திரிய தர்மம் சொல்லியிருக்கிறது?

மகாபாரதத்தில் பக்கச்சார்பு

மகாபாரதம், வெறும் காவியமாக மட்டுமே இல்லாமல், புனிதமான ஒரு தர்ம வழிகாட்டியாக, முன்னுதாரணமாக இருக்குமானால், அது பக்கச்சார்பின்றி நடுநிலையுடன் எழுதப்பட்டிருக்க வேண்டுமல்லவா? தீய பழக்கங்கள் உடையவர்கள் கௌரவர்கள் எனவும், பாஞ்சாலியின் துகில் உரிந்ததையும் அவர்களின் ஆணவத்தையும் அதற்கு உதாரணமாகவும் காட்டுபவர்கள், அர்ஜுனனும் கண்ணனும் கணக்கற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததையோ, அவனது சாதித்திமிரையோ பீமனின் ஆணவத்தையோ வசதியாக மறந்துவிடுகின்றனர். முன்முடிவுகள் எதுவுமின்றி கவனித்தால், கௌரவர்களுக்கும் முதல் மூன்று பாண்டவர்களுக்கும் குணங்களில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பது தெரியவரும். அதேபோல, சகுனியின் தந்திரங்களை இழிவாக சித்தரிக்கும் மகாபாரதம், அதற்குச் சமமான, அல்லது அதைவிட மோசமான கிருஷ்ணனின் வேலைகளுக்கு (இரவில் போர், துரோணர் கொலை, போர் முறைகளை மீறி துரியோதனனை கொன்றது...etc போன்றவற்றுக்கு) "அதர்மத்தை பயன்படுத்தித்தான் (இல்லாத க்ஷத்திரிய) தர்மத்தை நிலைநாட்டவேண்டும்" என்கிறது.


மேற்குறிப்பிட்டவற்றுடன், வரலாற்று ஆதாரங்களுடன் சேர்த்துப் பார்த்தால், மகாபாரதம் குறித்த உண்மை புலனாகும். அதாவது, குருஷேத்திரப் போர், வரலாற்றில் உண்மையில் நிகழ்ந்த ஒன்று. வேதகால இந்தியாவில் 'குரு' தேசத்தில் இரண்டு அரச வம்சங்களிடையே நிகழ்ந்த, பல அரசியல் பின்விளைவுகளை ஏற்படுத்திய ஒரு போர்தான் குருஷேத்திரப் போர். ஆனால், மகாபாரதம் காட்டுவதுபோல் அல்லாமல், போருக்கு காரணமான இரு குலத்தவருமே ஆணவம், வன்மம், போன்ற மனித குணங்கள் கொண்ட சாதாரண அரசர்கள். புராணத்தை வைத்துப் பார்த்தால், இரு அரசகுலங்களுக்குமான (உரிமையுள்ள அரச குலமான கௌரவர்களுக்கும், அரசர்களுக்கு இரத்த சம்பந்தமே இல்லாத குழுவான பாண்டவர்களுக்கும்) தனிப்பட்ட ஈகோ பிரச்சினையில் பல்லாயிரம் உயிர்கள் கொல்லப்படுள்ளது தெரியவரும்.  கிருஷ்ணன், சகுனி இருவரும், இரு பக்கங்களுக்கும் இராஜதந்திரிகளாக இருந்திருக்கலாம். "வரலாறு என்றுமே வென்றவர்களால் எழுதப்படுகின்றது" என்பதற்கமைய, பாண்டவர்கள் வென்றபிறகு, பாண்டவர்கள் சார்பான ஆசிரியர் ஒருவரால், உண்மை நிகழ்ச்சிகள் சில ஊதிப் பெருப்பிக்கப்பட்டு, நிகழ்ந்த காலம், படைகளின் அளவு போன்றவை பலமடங்கு மிகைப்படுத்தப்பட்டு, ஏராளமான கற்பனைத்திறனுடன் இயற்றப்பட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கி வேதகால கடவுளர்களையும் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட மகாகாவியம் மகாபாரதம் எனலாம்.

ஒரு காவியம் பக்கச்சார்பாக எழுதப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. எல்லாக் கதைகளும் அப்படித்தான் எழுதப்படுகின்றன. ஆனால், ஒரு புனித நூல் அவ்வாறு பக்கச்சார்பாகவும், முரண்பாடுகள் நிறைந்ததாகவும் இருக்கக் கூடாது. எல்லாப் புராணங்களையும் போல பக்கச்சார்பாக எழுதப்பட்ட மகாபாரதம், ஒரு பக்கத்தை, அரச குலத்தில் பிறக்காதவர்களை அரசியல் உரிமையுள்ளவர்களாகக் காட்டி, அவர்களை மிக நல்லவர்களாகவும், அவர்கள் செய்வதெல்லாம் தர்மம் எனவும், மறு பக்கத்தை மிக மோசமானவர்களாகவும் அவர்கள் செய்வது முழுவதும் அதர்மம் எனவும் சித்தரிக்கின்றது. அரசர்களின் மட்டத்தில் நிகழும் கதை என்பதால், சாதாரண குடிமக்கள் இப்போரால் அடைந்த பாதிப்புக்கள் பற்றிய விபரங்கள் தரப்படவில்லை. இப்படி எழுதப்பட்ட மகாபாரதத்தில், காலப்போக்கில் பல கதைகள் உட்செருகல்களாக நுழைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பின்னணியில், மகாபாரதத்தின் புனிதத்தன்மையை கேள்விக்குட்படுத்தினால், தான் கூறும் க்ஷத்திரிய தர்மத்துக்குள்ளேயே முரண்பாடுகள் நிறைந்து காணப்படும், அரசியல் உரிமையற்ற பாண்டவர்களுக்கு மட்டும் பக்கச்சார்பாக எழுதப்பட்டிருக்கும், பொதுமக்களின் பொதுநலனை விவாதிக்காத மகாபாரதக்கதையில் பலரும் எதிர்பார்க்கும் புனிதத்தன்மை இல்லை என்பது தெரியவருகின்றது. மகாபாரதத்தை சுவையான, இலக்கியப் பெறுமதி மிக்க ஒரு காவியமாக பார்த்துப் போற்றலாம். ஆனால், புனிதத்தை அங்கே எதிர்பார்க்க முடியாது, கூடாது என்பதே என்னுடைய கருத்து.

பின்குறிப்புமகாபாரதத்தின் ஒரு பகுதியாக வரும் பகவத் கீதை, இந்திய தத்துவங்களின் ஒரு பகுதியின் சாரத்தை வழங்குகிறது. அதில் விபரிக்கப்பட்டிருக்கும் ஆன்மா, கர்மா, தொடர் பிறவிகள் போன்றவைற்றை விரிவாக ஆராய்வது வேறு விஷயம். பகவத் கீதையை நான் வாசித்ததில்லை. இருந்தும் ஆன்மா, கர்மா போன்ற விடயங்கள் அறிவியல் ரீதியாக அல்லது நம்பத்தகுந்த விதத்தில் நிரூபிக்கப்படாததாலும், அவற்றின் தேவை இல்லாமலே பல விடயங்களை எளிதாக விளக்க முடிவதாலும், மெனக்கட்டு அவற்றில் நம்பிக்கை வைக்காமலே ஒரு மனிதன் நல்லவனாக, பூரண மனிதத்தன்மையுடன் வாழமுடியும் என்பதாலும் அவற்றை நான் நம்புவதில்லை. எனவே, எல்லாரும் புரிந்துகொள்ளக்கூடிய மகாபாரதக் கதையில் எதிர்பார்க்கப்படும் புனிதம் இருக்கிறதா என்றே இங்கே எழுதியிருக்கிறேன்.
என் புரிதலில் அல்லது எனது தரவுகளில் ஏதும் தவறுகள் இருந்தால், பின்னூட்டங்களில் தெரியப்படுத்தவும்.

3 comments:

  1. மகாபாரதம் பற்றி பலபார்வைகள் உண்டு. தவிர புனிதம் என்பது எதுவென்பதைப்பொறுத்து புனிதத்தை எதிலும் எதிர்பார்க்கலாம் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். இருந்தாலும், கட்டுப்பெட்டித்தனமான conservative சமூக நம்பிக்கைகள் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் மகாபாரதக் கதையை புனிதம் என நம்பி ஆதரிக்கிறார்கள் என்பது முரண்நகை அல்லது hypocrisy அல்லவா?

      Delete
  2. Best Casinos in Las Vegas, NV - Mapyro
    List of Casinos 여수 출장마사지 in Las Vegas, NV · 시흥 출장샵 Wild 전주 출장마사지 Casino (Las Vegas, NV) · The Venetian Resort & Casino (Paragon Casino) 제주도 출장샵 · The Venetian 군산 출장안마 Casino Hotel & Spa (Las Vegas)

    ReplyDelete

DISCLAIMER

மேலே சொன்னதுல உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா அவசரப்பட்டு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவிடவேண்டாம். பின்னூட்டப்பெட்டிக்கு வாங்க, பேசலாம். எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.