Parody (நையாண்டி) என்பது ஒரு பிரபலமான இலக்கிய / திரைப்பட வகையாகும். இதுவரை வந்த தமிழ்ப்படங்களின் கிளிஷேக்களை பயங்கரமாக கிண்டலடித்த தமிழ்ப்படம் (2010), ஆங்கில பேய்ப்படங்களை கிண்டலடித்து வெளிவந்த Scary Movie படவரிசை, ஹிந்தி காதல் கதைகளை ஓரளவு பகடிக்குள்ளாக்கிய I Hate Luv Storys (2010), உலகமே பயந்து நடுங்கிய ஹிட்லரை அவரது காலத்திலேயே நையாண்டி செய்து வெளிவந்த சார்லி சாப்ளினின் The Great Dictator (1940) எல்லாம் மிகுந்த புகழ் பெற்றவை.
அந்த வகையில், மனித வரலாற்றின் பல பகுதிகளை கலைநயத்தோடு நையாண்டி செய்து பெருவெற்றி பெற்ற படம்தான் Mel Brooks நடித்து இயக்கிய The History of the World: Part-I. இந்த Mel Brooks என்பவர் ஒரு நையாண்டி ஸ்பெஷலிஸ்ட். அறிவியல் புனைவுகள் முதல் கௌபாய் கதைகள் வரை பல வகைகளை கிண்டலடித்து படங்கள் இயக்கியிருக்கிறார். வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர்.
பதினைந்து கட்டளைகள்! |
மனித இனம் உருவானது முதல், கற்கால நிகழ்ச்சிகள், பத்துக் கட்டளைகள் (Ten Commandments), ரோம சாம்ராஜ்ஜியத்தின் நடைமுறைகள், இயேசுவின் கடைசி விருந்து (Last Supper), யூதர்களை சித்திரவதைப்படுத்தி மதமாற்றம் செய்த Spanish Inquisition எனும் புனித இயக்கம், பிரஞ்சுப் புரட்சி எனும் வரலாற்றுப் பாடப்புத்தகத்தின் அத்தியாயங்களெல்லாம் பிரிக்கப்பட்டு வயிறு வலிக்கச் சிரிக்கும்படி நையாண்டி செய்யப்பட்டுள்ளன.
படம் முழுவதும் பார்த்துப் பார்த்து செதுக்கிய வசனங்கள், பாடல்வரிகள் இருக்கின்றன. ஒரு சோறு பதமாக, இறுதி விருந்தில் இயேசு உரையாற்றும் நேரத்தில் உணவு விடுதியின் பணியாள் குறுக்கிடும்போது நடக்கும் சம்பாஷணை இதோ:
வரலாற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்து சிரிக்க முடியும். படத்தின் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை முழுதும் ரசித்து சிரிக்கவேண்டுமானால், உரோம அரிச்சுவடி, இயேசுவுக்கு துரோகம் செய்தவனின் பெயர் என்ன, கிரேக்க புராணங்களில் வரும் ஒடீபஸ் (Oedipus) யார், Sammy Davis Jr. யார் என்பது போன்ற கொஞ்ச விஷயங்களும் ஆங்கில வட்டார வழக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் ஒடீபஸின் சோகக்கதையை, போகிறபோக்கில் ஒரு பொதுவான ஆங்கில கெட்டவார்த்தையில் சொல்லிவிடுவது sheer genius.
அத்துடன் படத்தின் பெயரில் Part I என இருந்தாலும், படம் பெருவெற்றி பெற்றாலும், படத்தின் இரண்டாம் பகுதி தயாரிக்கப்படவில்லை. காரணம், தலைப்பிலும் ஒரு பகடி இருக்கிறது. மனித வரலாற்றை எழுதுகிறேன் பேர்வழி என எழுத ஆரம்பித்து, முதல் பாகத்தை மட்டுமே வெளியிட்ட பிறகு, தலை வெட்டப்பட்டு இறந்த Sir Walter Raleigh இன் நினைவாகத்தான் The History of the World: Part-I என பெயர் வைக்கப்பட்டதாம். :-D
இப்படி தலைப்பில் ஆரம்பித்து, படம் முழுவதும் நையாண்டி காத்திருக்கிறது. இதற்கு மேலும் சொன்னால், சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். மிகவும் conservative ஆனவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய மத நம்பிக்கையாளர்கள், ஆங்கில கெட்டவார்த்தைகள் பிடிக்காதவர்கள் படத்தை பார்க்காமல் விடுவதே நல்லது. (படத்துக்கு Restricted ரேட்டிங் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்) மற்றவர்கள், குறிப்பாக வரலாறு தெரிந்தவர்கள் கட்டாயம் பார்த்துச் சிரிக்கவேண்டிய படம்.
My Rating: 9/10
No comments:
Post a Comment