இந்தப்படம், நான் இதுவரை பார்த்த, விமர்சித்த படங்களிலிருந்து மிகவும் வேறுபட்டது. பார்வையாளனின் தனித்துவமான புரிதலை முன்னிறுத்தும், ஒரு abstract art –க்கு ஒப்பாக, இருத்தலியம் (Existentialism), பின்நவீனத்துவம் (Neomodernism) போன்ற எனக்குப் பரிச்சயமில்லாத சில பகுதிகளுக்குள் பயணிக்கிறது. இருந்தும், இந்த வார்த்தைகளைக் கேட்டாலே காததூரம் ஓடிவிடும் தற்குறியான என்னையே ஈர்த்து, சிந்திக்கவைத்ததால், இப்படத்தைப் பற்றி எழுத முனைகிறேன். இலக்கிய ரசிகர்கள் கண்ணில் ஏதேனும் சொற்பிழை / பொருட்பிழை தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், திருத்திவிடுகிறேன்.
முதல் பத்து நிமிடங்கள்
ஒரு வயதானவர் ஒரு பூட்டிய அறைக்குள் கண்விழிக்கிறார். அந்த அறை 14x14x14 அடி கனசதுரமாக, சுவர்கள் முழுவதும் வினோத குறியீடுகள் நிறைந்து, நீல நிறத்தால் ஒளியூட்டப்பட்டிருக்கிறது. கனசதுர அறையின் ஆறு பக்கங்களிலும் ஒவ்வொரு, ஒரே மாதிரியான, பூட்டப்பட்ட, திறக்கக்கூடிய சதுரக்கதவுகள். ஒரு கைதியைப் போல உடை மற்றும் பெயர்த் தகடு அணிந்திருக்கும் அவருக்கு இந்த அறை பற்றிய எவ்வித முன்நினைவும் இல்லை. ஒரு கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறார். அடுத்த பக்கத்திலும் இதே போன்ற, ஆனால் சிவப்பு நிற அறை தெரிகிறது. கதவைப் பூட்டிவிட்டு, இன்னொரு கதவைத் திறந்தால், அங்கேயும் இதே போன்ற, ஆனால் பிரவுன் நிற அறை! கதவைத் தாண்டி, அந்த அறைக்கு செல்கிறார்.... அங்கே: ஷ்ஷ்ஷ்க்க்க்..... அவ்வளவுதான், அந்தச் பிரவுன் அறைக்குள் இருந்த, கண்ணுக்குத் தெரியாத, கூரிய இரும்பு வலையொன்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் அறுக்கப்பட்டு, அவரது உயிரற்ற உடல் பல துண்டுகளாக விழுந்து சிதறுகிறது!!
கதை: அறிமுகம்
இப்போது, இன்னொரு அறைக்குள் படம் துவங்குகிறது. இதுபோன்ற வெவ்வேறு அறைகளுக்குள் தனியாக விழித்தெழுந்து, ஒன்றும் புரியாமல், அடுத்தடுத்த அறையாக முன்னேறி, சில அறைகளில் காத்திருக்கும் ஆபத்துக்களிலிருந்து சில காயங்களுடன் தப்பித்த ஆறு அந்நியர்கள் ஒரு அறைக்குள் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். வெவ்வேறு மனநிலைகள், நம்பிக்கைகள் கொண்ட அவர்கள்: ஒரு போலீஸ்காரர், ஒரு டாக்டர் (பெண்), ஒரு இன்ஜினியர், ஒரு பன்னிரண்டு வயது சிறுமி மற்றும் ஒரு மனநோயாளி.
இந்த வினோதமான சூழ்நிலையில் திடீரென சிக்கிக்கொண்ட இவர்களை பயமும் குழப்பமும் ஆட்டுவிக்கிறது. இந்தச் சூழலை இவ்வளவு பொருட்செலவு செய்து யார், ஏன், எப்படி உருவாக்கினார்கள், அதில் ஏன் தங்களைச் சிக்கவைத்தார்கள் எனும் கேள்வி அவர்களிடையே எழுகிறது. “இது நிச்சயம் அரசாங்கத்தின் வேலைதான். மக்களின் பணத்தை வைத்து இரகசியமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்”, “இது வேற்றுக்கிரகவாசிகளின் ஒரு சோதனையாக இருக்கலாம்” என்றெல்லாம் அந்த டாக்டர் பெண்மணி யூகிக்கிறாள். “இந்தக் கேள்விகள் எல்லாம் தேவையற்றவை. இந்தச் சூழலை விட்டு உயிருடன் வெளியேறுவது எப்படி என்பதுதான் நமது உண்மையான பிரச்சனை. ஒரு குழுவாக செயற்பட்டால், நம்மால் இங்கிருந்து வெளியேற முடியும்.” என்று சொல்லி, ஊக்கப்படுத்தி, குழுவை அந்தப் போலீஸ்காரன் வழிநடத்துகிறான்.
இப்படியாக அடுக்கப்பட்டிருக்கும் அறைகளில், சில அறைகள் மட்டுமே எந்த ஆபத்தான பொறிகளும் இல்லாத, பாதுகாப்பான அறைகள். மற்றயவற்றில் விதவிதமான பொறிகள் காணப்படுகின்றன. சத்தம், அசைவு, உடலின் இரசாயன மணம் என வெவ்வேறு விதமாக தூண்டப்படும் பொறிகள் உள்ள அறைகளுக்குள் நுழைந்தால் மரணம் காத்திருக்கிறது. அடுத்துவரும் ஒவ்வொரு அறையும் பாதுகாப்பானதா, இல்லையா என கண்டறிந்து முன்னேறுவதுதான் சவால். ஒவ்வொரு அறைகளின் எண்களிலும் சில எளிய மர்மங்கள் ஒளிந்திருப்பதையும், அதை வைத்து ஒரு அறை பாதுகாப்பானதா இல்லையா என கண்டுபிடிக்கலாம் என, மனக்கணிதத்தில் கில்லாடியான அந்தச் சிறுமி புரிந்துகொள்கிறாள். அவளது உதவியால், அவர்கள் பல அறைகளைக் கடக்கிறார்கள். இருந்தும், பாதுகாப்பானது என கண்டறிந்த ஒரு அறையில் பொறி இருப்பதைப் பார்த்ததும், அந்த எண்களின் மர்மங்கள் அவ்வளவு எளிதானவை அல்ல என்பது புரிகிறது. அந்தச் சிக்கலான மர்மங்களையும் அந்தச் சிறுமியின் உதவியுடன் புரிந்துகொண்டு, அடுத்தடுத்த அறையாக முன்னேறுகிறார்கள்.
இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது, அந்த இன்ஜினியர், இந்த வினோத பொறிமுறையின் ஒரு பகுதியை வடிவமைத்திருக்கிறான் எனத் தெரிய வருகிறது. அவனை விசாரிக்கும்போது, “இது யாராலும் திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. இது ஒரு மாபெரும் விபத்து. இப்பொறிமுறைகள் எப்படி, ஏன் இயங்குகிறன என்பது எந்தத் தனிமனிதனுக்கும் முழுதாகத் தெரியாது. இதற்கு உள்ளே சிக்கிக்கொண்ட எமக்கு மட்டும்தான் இது எப்படி இயங்குகிறது என்பது ஓரளவாவது தெரிந்திருக்கிறது. புரிகிறதா?” என்கிறான். இப்படியே போகும்போது, இந்த வினோத சூழ்நிலையின் மன அழுத்தம் காரணமாக, குழுவினருக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. வாக்குவாதம் முற்றி, போலீஸ்காரன் டாக்டரை கொலை செய்துவிட்டு, சிறுமியை பலாத்காரம் செய்ய முயல்கிறான்! அவனை அடித்துப்போட்டுவிட்டு மற்றவர்கள் முன்னேறுகிறார்கள். அவர்கள் வெளியேறினார்களா இல்லையா என்பதே கதை.
எனது புரிதல்
இந்தப் பொறிமுறை யாரால், ஏன் உருவாக்கப்பட்டது? இவர்கள் ஏன் இதில் சிக்கிக்கொண்டார்கள்? எனும் கேள்விகளுக்கான பதில்கள் படத்தில் இல்லை! இப்படத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பது பார்வையாளனின் சுதந்திரத்துக்கே விடப்படுகிறது. எனது புரிதலின்படி, இந்தப் பொறிமுறையானது நாம் வாழும் இந்த உலகத்தைக் குறிக்கலாம். ஏன் பிறந்தோம் என்று தெரியாமல், வெவ்வேறு நம்பிக்கைகள், மனநிலைகள் கொண்ட அந்நியர்களான நாம் இங்கே கூட்டாக சிக்கிகொண்டிருக்கிறோம். உலகம், ஒரு கடவுளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? அப்படியானால் ஏன் உருவாக்கப்பட்டது? அல்லது அந்த இன்ஜினியர் சொல்வதுபோல, இதுவொரு மாபெரும் விபத்தின் விளைவா? இதிலிருந்து வெளியேற முடியுமா? வெளியே என்னதான் இருக்கிறது? என்ற கேள்விகளை நம்மில் சிலர் தீவிரமாக விவாதிக்கிறோம். உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவியல் ஆராய்கிறது. அந்தச் சிறுமி செய்வதுபோல, முதலில் எளிய கொள்கைகளில் ஆரம்பித்து, நம் பிழைகளைத் திருத்திக்கொண்டு, படிப்படியாக சிக்கலான கொள்கைகளுக்கு முன்னேறுகிறோம். அதேநேரத்தில், இவ்வளவு யோசிக்காமல், இந்த நொடியில் என்ன செய்ய வேண்டும் எனும் முடிவுகளை உடனடியாக எடுக்கும் நிர்ப்பந்தத்திலும் இருக்கிறோம். இந்த வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள எமக்கு பிறரின், சமூகத்தின் உதவி தேவைப்படுகிறது. நம் நண்பர்களும் எதிரிகளும் காலத்துக்கேற்ப, சூழ்நிலையின் அழுத்தத்திற்கேற்ப மாறிக்கொண்டிருக்கிறார்கள். நாம், நம் சூழ்நிலை மற்றும் சமூகத்தினூடாக எங்கேயோ பயணித்துக்கொண்டிருக்கிறோம். எனவே, இந்தப் படம், மனித வாழ்வின் அபத்தங்களை பிரதிபலிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
இதுதவிர, இணையத்தில் தேடினால் பலரும் பல்வேறு விதமாக இதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பத தெரிகிறது. சிலரின் புரிதல்படி, நம்மைச்சுற்றி நாமே உருவாக்கிக்கொள்ளும் சூழ்நிலைச் சிறைகளை இப்படம் உருவகப்படுத்துகிறது. இப்படியாக, பார்வையாளனின் புரிதலை மட்டுப்படுத்தாமல், ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களூடாக தனித்துமாக புரிந்துக்கொள்ளக்கூடியதாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
என்னைப்பொறுத்தவரை, அந்தப் பொறிமுறையின் மர்மங்கள் மர்மமாக விடப்படுவதே படத்தின் மிகப்பெரிய பலமாகும். அதுவே, நம் சிந்தனையைத் தூண்டி, இப்படத்தை ஒரு சாதாரண அறிவியல் புனைவு எனும் நிலையிலிருந்து இன்னொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்கிறது. இருந்தும், இப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இரண்டு படங்களில் [Hypercube (2002), Cube Zero (2004) ] இந்த மர்மங்கள் விளக்கப்படுகின்றன. அவை, இதன் தரத்தை தாழ்த்துகின்றனவா இல்லையா என்பது தெரியவில்லை.
Verdict
பொழுதுபோக்காக படம் பார்க்கும் ரசிகர்கள் மற்றும் தலையில் முடி அதிகம் இல்லாதவர்கள் இப்படத்தைத் தவிர்ப்பது நலம். என்னைப்போல வெட்டியாக இருப்பவர்கள், சில நாட்களுக்கு உட்கார்ந்து யோசிக்க வேண்டுமானால் தரவிறக்கிப் பார்க்கலாம். அதைவிட, நம் Baskar சார், வரசித்தன் சார் போன்ற இலக்கியவாதிகள் இப்படத்தைப் பார்த்தால், இதில் இன்னும் பல பரிணாமங்களை நிச்சயம் கவனிக்கமுடியும். அப்படிப் புரிந்துகொண்ட விஷயங்களைப் பகிரமுடிந்தால் இன்னும் நல்லது. J
My Rating: 9/10
No comments:
Post a Comment