வெசாக் என்பது மே மாத பௌர்ணமியில் இலங்கை முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு பௌத்தப் பண்டிகை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். வெசாக் கொண்டாட்டங்களின் ஒரு முக்கியமான கூறு வெசாக் தன்சல்கள் எனப்படும் ஒருவித அன்னதானங்கள். வெசாக் காலத்தில், முன்னிரவு வேளைகளில் பொது இடங்களில் பொதுமக்கள் குழுவாக திட்டமிட்டு தயாரித்து, இலவசமாக வழங்கும் உணவுவகைகளை டை கட்டி காரில் வந்து இறங்கும் ஹை-டெக் குடும்பங்கள்முதல், இளைஞர்கள், முதியவர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுவதை காணமுடியும். “பார்த்தா படிச்ச பெரிய மனுஷனா இருக்கியே, ஓசில வாங்கி சாப்பிடறதுக்கு வந்துட்ட...” என்று யாரும் முகம்சுளிக்காமல் எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவதுதான் இங்கே சிறப்பு.
மரவள்ளி அவியல் + சம்பல் |
இப்படி, நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, எனது பள்ளி வழக்கம்போல தன்சல் ஏற்பாடு செய்தது. பள்ளிக்கு முன்னால் தகரக் கூரை போட்டு அதற்குள்ளே மேஜை வைத்து, பள்ளியின் பல்வேறு சங்கங்கள் அடுத்தடுத்தாக தன்சல்கள் வைப்பது என ஏற்பாடு. உணவுக்கான செலவை அந்தந்த வாலிபர் சங்கங்களே கைக்காசைப் போட்டு பார்த்துக்கொள்ளவேண்டும். விட்டால், ஒட்டுமொத்த சாப்பாட்டையும் நம்மாட்களே முடித்துவிட்டு மற்ற தன்சல்களை வேட்டையாடக் கிளம்பிவிடும் அபாயம் இருந்ததால், ஆசிரியர்களும் அதிபரும் டீ-சர்ட், ஷார்ட்ஸ் மாறுவேடத்தில் மேற்பார்வை பார்க்கத் தயாராக இருந்தனர். நம் இன்டராக்ட் சங்கத்துக்கும் அங்கே ஒரு தன்சல் தரப்பட்டது. நாங்கள் வைப்பது, வெசாக் வரலாற்றில் யாரும் வைக்காத தன்சலாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரின் மூளை கசக்கப்பட்டு, கடைசியில் ஐஸ்க்ரீம் தன்சல் வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முதல்தான், நான், என்னுடைய அணிசேராக் கொள்கை மற்றும் என் வாயின் நீளம் காரணமாக அந்தச் சங்கத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தேன். இருந்தும், என் நண்பர்கள் எல்லாரும் அங்கே இருந்ததாலும், அன்று வெசாக் நேரத்தில் இரவில் கண்டி நகரத்தில் சுற்றுவதற்கு ஒரு காரணம் கிடைக்கிறது என்பதாலும் அந்த ஐஸ்க்ரீம் தன்சலுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதென அறிக்கை விட்டிருந்தேன்.
வெசாக்குக்கு முதல்நாள் நம் தன்சல் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அருகிலிருக்கும் ஸ்ரீ ரம்யா உணவகத்துக்கும் பள்ளிக்குமாக கையில் ஐஸ்க்ரீம் வாளிகளுடன் ஓடும் பொறுப்பை ஆரம்பத்தில் என்னை நம்பி கையளித்தார்கள்! இருட்டில் போகும்போது முகமூடி போடாத கொள்ளையர்கள் ஐஸ்க்ரீம் வாளியை குறிவைத்து தாக்கும் அபாயம் இருப்பதால், அந்த வேலையிலிருந்து கொஞ்ச நேரத்தில் நழுவி, நிகழ்வை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். பார்த்தால், ஐஸ்க்ரீம் தருகிறார்கள் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவி யட்டிநுவர வீதியில் எங்கள் பள்ளியிலிருந்து கொழும்பு வீதிச் சந்தி வரை (ஒரு ஐநூறு மீட்டருக்கு) அனுமார் வாலாக மக்கள் வரிசை நீண்டிருந்தது. “நம்ம சங்கத்தோட பெருந்தன்மை பற்றி உங்க பொன்னான கருத்து என்ன?” எனும் ரீதியில் அவர்களின் ரியாக்ஷன்களை படமெடுத்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்சநேரம் சில்லறை விற்பனையாக ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் என கொடுத்துக்கொண்டிருந்த நம்மவர்கள், திடீரென உற்சாகம் தலைக்கேறி, ரோட்டில் போகும் கார், வேனையெல்லாம் மறித்து “ஐஸ்க்ரீம் வேணுமா ஐஸ்க்ரீம்??” என கூவத் தொடங்கினார்கள். ஐஸ்க்ரீம் தின்னக் கூலி வேண்டுமா? எல்லாரும் காரை ரோட்டில் நிறுத்தி ஐஸ்க்ரீமை வாங்கத் தொடங்க போக்குவரத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. இப்படியே கொஞ்ச நேரம் போனதும், இத்தகைய திடீர் மொத்த விற்பனை காரணமாக நாங்கள் வாங்கி வைத்திருந்த ஐஸ்க்ரீம் முழுதும் முடிந்துவிட்டது! நாங்கள் அதிர்ந்தாலும், பள்ளி நிர்வாகம் கவலைப்படவில்லை. உடனடியாக தன்சலை இன்னொரு சங்கத்துக்கு கையளிக்க, அவர்கள் தாங்கள் திட்டமிட்டு வைத்திருந்த மரவள்ளிக்கிழங்கை அவித்து வழங்கத் தொடங்கினர். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்த நாங்கள் பின்வழியாக தப்பிவிட்டோம். “இங்க ஐஸ்க்ரீம் இல்லையாம்டா, வெறும் அவிச்ச கிழங்கு மட்டும்தானாம்.” என செய்தி பரவத் தொடங்கியதும், வரிசையில் நின்றவர்களுக்கு கடுப்பாகிவிட்டது. “டேய்... ஐஸ்க்ரீமுக்காக முக்கால் மணிநேரம் கால்கடுக்க கியூல நின்னா, அவிச்ச கிழங்கைத் தாறீங்களேடா... அடுத்த தெருவுல ஒரு கிழங்கு தன்சல் ஈயாடுது. அங்கேயே போய் இதை தின்னிருப்போமேடா... உங்களுக்கெல்லாம் அந்த ஆண்டவன் வச்சிருக்காண்டா” என்றெல்லாம் சிலர் காண்டாகி கத்த ஆரம்பித்தார்கள். கிழங்குச் சங்கத்தினர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிந்ததும், “இந்த ஸ்கூல் பசங்களே இப்படித்தான்” என்றபடி கூட்டம் கலைந்துவிட்டது.
அடுத்த வருஷம் தன்சல் வேலை இல்லாததால், வேட்டைக்குப் புறப்படுவது என முடிவு செய்தோம். தன்சல் வேட்டை என்பது சாதாரண காரியம் இல்லை. கண்டி நகரெங்கும் சிதறிக்கிடக்கும் தன்சல்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணவுதான் கிடைக்கும். எங்கெங்கே என்னென்ன உணவுகள் கிடைக்கிறன, ஒவ்வொரு தன்சலும் என்னென்ன நேரத்தில் திறந்து மூடுகின்றன எனும் தகவல்களை சேகரிப்பது குதிரைக் கொம்பு. அதில், கூட்டம் குறைவான தன்சல்களை குறிவைத்து எல்லா தன்சல்களையும் விசிட் செய்யும் வழியைக் கண்டறிவது என்பது travelling salesman பிரச்சனையை விட கடினமானது. இருந்தும் மனம் தளராமல், எல்லாரையும் ஒருங்கிணைத்து வேட்டைக்கு புறப்படுவதற்கு மாலை ஆறரை ஆகிவிட்டது.
நகரம் முழுதும் நடந்து ஜூஸ், கோப்பி, மரவள்ளி என முன்னேறிக்கொண்டிருக்கும்போது நம் புலனாய்வு நெட்வொர்க்கிலிருந்து ‘அடுத்த தெருவில கொத்து ரொட்டி தரப்போறாங்கடா, ஓடியாங்க’ என அவசரத் தகவல் வந்தது. ‘கொத்து ரொட்டியா...’ என பிளந்த வாயில் ஊறிய எச்சிலுடன் ஓடினால், அங்கே, இன்னும் ஆரம்பிக்காத தன்சலில் கூட்டம் அலைமோதியது. மூன்று தெருவுக்கு வளைந்து நெளிந்த வரிசையைப் பார்த்து லைட்டாக பின்வாங்கியபடியே விசாரித்தால் அரை மணி நேரத்தில்தான் திறப்பார்கள் எனத் தெரிந்தது.
“அரை மணில திறந்தா, நமக்கு கிடைக்க எப்படியும் ஒரு மணிக்கு மேலே ஆகும். வேற எங்கயாவது போவோமா?”
“எத்தனை மணியானாலும், கிடைக்கறது கொத்துடா டேய். கூட்டத்தை பார்த்தா சிக்கன் போடுவாங்கபோல இருக்கு. இங்கேயே நின்னுடுவோம்”
கொத்து ரொட்டி |
இரண்டு மணிநேரம் பொறுமைகாத்த எங்களை நாங்களே பூரித்தபடி கையை நீட்டினால், வரிசையாக நின்ற கொத்து வள்ளல்களில் முதல் ஆள் நீட்டிய கையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் கப்பை வைக்க, அடுத்தவர் அதில் இரண்டு மேஜைக்கரண்டி கொத்துவை, அதுவும் மரக்கறிக் கொத்துவைப் போட்டு நம்மை அப்பால் தள்ளிவிட்டார். கடைசியில், “என்னடா இது?! இந்த ஒருபிடி கொத்துவை சாப்பிட ரெண்டு மணிநேரம் கால்கடுக்க நின்னிருக்கோமே!” என்று நொந்துவிட்டோம். இது ஒரு poetic justice என்று நம்மை நாமே தேற்றிக்கொண்டு, ஸ்கூல் ஜூனியர்கள் யாரும் நம்மை அடையாளம் கண்டறிந்து சிரிப்பதற்குள் பம்மிக்கொண்டு அடுத்த கடைக்கு நகர்ந்தோம்.